பஸ் கட்டண உயர்வு எவ்வளவு? எந்த நேரத்திலும் வரலாம் அறிவிப்பு

2

சென்னை: பஸ் கட்டண உயர்வு தொடர்பாக, பொது மக்கள், அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பஸ் உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, கட்டண உயர்வு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக, 1.85 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர். அரசு பஸ்களை இயக்க தினமும் 17 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது.


டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, அரசு போக்குவரத்து கழகங்களின் தினசரி வருவாய், 39.3 கோடி ரூபாய்; செலவு 57.68 கோடி ரூபாய்; பற்றாக்குறை 18.65 கோடி ரூபாயாக உள்ளது.


இதே கட்டணத்தில் தான், தமிழகம் முழுதும் 4,700 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பயணியர் கட்டணத்தை உயர்த்தக் கோரி தொடர்ந்த வழக்கில், நான்கு மாதங்களுக்குள் முடிவு எடுக்க, அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த உத்தரவின்படி, புதிய குழு அமைக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் பஸ்களின் கட்டண உயர்வு குறித்து, 1,000க்கும் மேற்பட்ட பொது மக்கள், நுகர்வோர் அமைப்புகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளன.




இதன் அறிக்கை, விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறியதாவது:




கடந்த 2018ல், டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. அப்போது, லிட்டர் டீசல் விலை 63 ரூபாய்; தற்போது, 92.49 ரூபாயாக உள்ளது. கேரளா வில், 1 கி.மீ., துாரத்துக்கு , 1 ரூபாய் 10 காசும், கர்நாடகா வில் 1 ரூபாயும், ஆந்திராவில் 1 ரூபாய் 8 காசும் கட்டணமாக உள்ளன.



ஆனால், தமிழகத்தில் 1 கி.மீ., 58 காசுகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை உயர்ந்து வருவதால், எங்களால் இழப்பை சரி செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம்.



எனவே, தமிழகத்தில் 1 கி.மீட்டருக்கு, 90 காசுகள் நீர்ணயம் செய்ய வேண்டும் என, கருத்து கேட்பு நிகழ்வில் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.


ரூ.600 கோடி

இழப்பு

அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகங்களில், இயக்கம் மற்றும் இதர செலவுகள் அதிகரித்து வருகின்றன. எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்போது, தமிழக அரசு கடன் வழங்கி வருகிறது. இலவச திட்டங்களை செயல்படுத்தி வருவதால், அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. மாதந்தோறும் அரசு பஸ்கள், 600 கோடி ரூபாய் வரை நஷ்டத்தில் ஓடுகின்றன. எனவே, நிதி நிலையை சமாளிக்க, ஓரளவுக்கு பஸ் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement