தங்க நகைகளை கணக்கீடு செய்ய வந்த அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்
இடைப்பாடி, இடைப்பாடி அருகே, வேம்பனேரி அய்யனாரப்பன் கோவிலில், இருப்பு உள்ள தங்க நகைகளை அளவீடும் செய்யும் பணியின் போது, ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கணக்கீடு செய்யாமலேயே அறநிலையத்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இது வேம்பனேரி மற்றும் கருப்பன்தெரு, சின்ன முத்தியம்பட்டி, பெரிய முத்தியம்பட்டி, காட்டூர், புதுப்பாளையம் உள்ளிட்ட 7 ஊர்களை சேர்ந்த, 36 குக்கிராமங்களுக்கு சொந்தமானது. இந்நிலையில், கோவில் நிர்வாகிகள் மீது கொடுக்கப்பட்ட புகாரால், 20 ஆண்டுக்கு முன்பு ஹிந்து சமய அறநிலையத்துறை கோவிலை தன்வசம் எடுத்து கொண்டது. அன்று முதல் தற்போது வரை, அறநிலையத்துறை அதிகாரிகள்-மக்கள் இடையே அவ்வபோது வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இக்கோவிலில் அய்யனாரப்பன் தங்க கிரீடம், தங்க நகைகள், வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் ஏராளமான ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்களில் பாதி கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையிலும், பாதிஆபரணங்கள் அறநிலைத்துறை அதிகாரிகள் வசமும் உள்ளது. இந்நிலையில் நேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் விமலா, சங்ககிரி ஒருக்காமலை செயல் அலுவலர் சங்கரன், சித்தரகோவில் சித்தேஸ்வரா கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில், ஆபரணங்களை கணக்கிடும் நேற்று நடந்தது. கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
முதலில் அறநிலையத்துறை அதிகாரிகள் வசம் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் எவ்வளவு எடை உள்ளது என, பொதுமக்கள் முன்னிலையில் கணக்கீடு செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள, 'சீல்' வைக்கப்பட்ட அறையினுள் இருக்கும் தங்கம், வெள்ளி பொருட்களை கணக்கீடு செய்ய அதிகாரிகள் முயன்றனர். அப்போது, நகைகளை கணக்கீடு செய்த பிறகு மீண்டும் அதே அறையில் பூட்டி சீல் வைக்க வேண்டும்; அறையின் சாவியை தங்களிடம் தான் கொடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகிகள், பூசாரிகள் நிபந்தனை விதித்தனர். ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் சீல் வைக்கப்பட்ட அறையை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கோவில் உண்டியலில் இருந்து ஆண்டுதோறும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறது. இதுவரை அந்த பணத்தில், ஒரு ரூபாய் கூட கோவிலுக்கு செலவிடப்படவில்லை எனக்கூறி, அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமலும், தங்க நகைகளை கணக்கீடு செய்யாமலும் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.