வருவாய் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சின்னசேலம் : செல்லியம்பாளையம் கிராமத்தில் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னசேலம் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தில் போயர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள சாலையை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் அதனை அகற்ற கோரி அதே பகுதியைச் சேர்ந்த அழகுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு, தாசில்தார் பாலகுரு தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.

சாலை தங்கள் சொந்த பட்டா நிலத்தில் இருப்பதாக கூறி, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிவசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர், வருவாய் துறையினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் எதிர்ப்பு காரணமாக வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பி சென்றனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement