கடை விரித்து கூவி அழைக்கும் பழனிசாமி; செல்வோர் தான் யாருமில்லை: துரைமுருகன்

4

வேலுார்: வேலுார் மாவட்டம், காட்பாடியில், அரசின் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற துரைமுருகன் அளித்த பேட்டி:


காவிரி - கோதாவரி இணைப்பு குறித்தெல்லாம் பேசத் துவங்கி விட்டார் பழனிசாமி. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. காவிரி - கோதாவரி ஆறுகள் இணைப்பு முயற்சி, எந்த நிலையில் இருக்கிறது என்பதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.


ஆனாலும், அது குறித்தெல்லாம் போகுமிடமெல்லாம் அவர் பேசுகிறார். எழுதிக் கொடுத்ததைத்தானே அவர் பேச முடியும்? அதற்கு முன்பாக, அது குறித்து கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொண்டு வந்து பேசலாம். அப்படி செய்யாததால் தான், அவருடைய பேச்சுக்கும் இயல்புக்கும் ஒத்து போகாத நிலை உள்ளது.




பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்தது, அக்கட்சியிலேயே யாருக்கும் பிடிக்கவில்லை என, பல நாட்களாக சொல்லி வருகிறோம். அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தி.மு.க.,வுக்கு வந்திருப்பதில் இருந்தே, உண்மை நிலையை உணர்ந்து கொள்ளலாம். அன்வர் ராஜா மனநிலையிலேயே இன்னும் பலர், அ.தி.மு.க.,வில் உள்ளனர். அவர்களும், அடுத்தடுத்து அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவர். ஆனால், அவர்கள் தி.மு.க.,வில் தான் இணைவரா என்பது தெரியாது.


பழனிசாமி, கடை விரித்து வைத்து, வாங்க சார் வாங்க, வாங்க சார் வாங்க என போவோர் வருவோரையெல்லாம் கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், யாரும் அவரை நம்பி, அவருடைய கடைக்குச் செல்லத் தயாராக இல்லை. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

Advertisement