ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி

சென்னை: புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ப்ரோ கோட் என்ற புதிய படத்தில் நடிப்பதற்காக, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நடிகர் ரவி மோகனுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தது.
80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படத்தை நிறுவனம் தொடங்கவில்லை. கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்டது. பட தயாரிப்பு நிறுவனம் 9 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு ரவி மோகன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தயாரிப்பு நிறுவனமான பாபி டச் கோல்டு யுனிவர்சல் சார்பில், நடிகர் ரவி மோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 'இந்த பிரச்னையில் நடிகர் ரவி மோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப அளிப்பதில் என்ன சிரமம் உள்ளது. இதனால் எதிர்மறையான விளம்பரம் தான் கிடைக்கும்' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, 'ரவி மோகன், ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
இரு தரப்பிற்கு இடையேயான பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தரை நியமித்தும் கோர்ட் உத்தரவிட்டது.




