ஓய்வு கால பண பலன்களை வழங்க கோரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

3

சென்னை: 'போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வுகால பணப்பலன்கள் வழங்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., சார்பில், நேற்று சென்னை பல்லவன் இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.




ஆர்ப்பாட்டம் குறித்து, சி.ஐ.டி.யு., மாநகர போக்குவரத்துப் பிரிவு பொதுச் செயலர் தயானந்தம் அளித்த பேட்டி:



அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியில் உள்ள, 1.20 லட்சம் பணியாளர்கள் மற்றும் 94,000 ஓய்வூதியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி உள்ளோம். 'ஓய்வு பெற்றோர் கோரிக்கைகளை, ஆட்சிக்கு வந்த 100 நாளில் நிறைவேற்றுவோம். பஞ்சப்படி உயர்வு வழங்கப்படும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, முதல்வர் வாக்குறுதி அளித்தார்.



ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. ஓய்வு பெற்றோருக்கான பணப்பலன்கள், 2023 ஜூலை மாதம் முதல், 3,500 கோடி ரூபாய் வழங்க வேண்டி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வு பெற்று 10 நாட்களில், ஓய்வு கால பணப்பயன்கள் வழங்கப்படுகின்றன.



ஆனால், போக்குவரத்து துறையில், 24 மாதங்களாக, 3,000 பேருக்கு இன்னும் ஓய்வு கால பலன்கள் வழங்கவில்லை. மே மாதம் நடந்த பேச்சில், போக்குவரத்து அமைச்சர், மூன்று மாதங்களில் ஓய்வு கால பணப்பலன் வழங்குவதாக தெரிவித்தார். ஆனால், இன்னும் வழங்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஆக., 5, 6, 7ம் தேதிகளில், தர்மபுரியில் நடக்கும் மாநில சம்மேளன மாநாட்டில், அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement