கழுத்தை அறுத்து 7 வயது மகளை கொன்ற கொடூரம்; தற்கொலைக்கு முயன்ற தந்தை 'சீரியஸ்'

ஆலந்துார்: பிரிந்து வாழும் மனைவி, தன்னிடமிருந்து மகளை பிரித்து விடுவாரோ என விரக்தியடைந்த கணவர், 7 வயது மகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற கொடூரம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை அயனாவரம், ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 38; பழைய ஸ்பீக்கர் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். மனைவியை பிரிந்து வாழும் இவர், நேற்று முன்தினம் இரவு, தன் 7 வயது மகள் ஸ்டெபிரோசுடன் வெளியில் சென்றார்; வீடு திரும்பவில்லை.
நேற்று அதிகாலை, தன் சகோதரி கெசியா என்பவரை மொபைல்போனில், சதீஷ்குமார் அழைத்துள்ளார். அதில், 'ஆலந்துார் எம்.கே.என்., சாலையில் உள்ள விஜய் பார்க் ஓட்டலில் தங்கியுள்ளேன்.
'மகள் ஸ்டெபிரோஸை கொலை செய்து விட்டேன். தானும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்' எனக்கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கெசியா, ஓட்டலுக்கு விரைந்துள்ளார். பின், ஓட்டல் அலுவலர், கெசியா இருவரும் சதீஷ்குமார் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்தனர்.
அங்கு, மகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார். உயிருக்கு போராடிய சதீஷ்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஓட்டேரியில் உள்ள சர்ச் ஒன்றிற்கு, 2017ம் ஆண்டு சென்றபோது, சதீஷ்குமாருக்கு ரெபேக்கா என்ற பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.
பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் மகள் ஸ்டெபி ரோஸ்.
திருமணத்திற்கு பின் ரெபேக்காவை, சதீஷ்குமார் உயர்கல்வி படிக்க வைத்தார். பின், அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில், ரெபேக்கா வேலைக்கு சேர்ந்துள்ளார்.
வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே, ரெபேக்காவின் நடவடிக்கை மாறியதாக
கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அப்போதெல்லாம் ரெபேக்கா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அடிக்கடி சதீஷ்குமார் கூறி அவமானப்படுத்தி உள்ளார்.
ஒரு கட்டத்தில், குடி பழக்கத்திற்கு அடிமையான சதீஷ்குமார், ரெபேக்காவை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். இதுதொடர்பாக, கடந்தாண்டு ரெபேக்கா கொடுத்த புகாரின்படி, சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு, ஆறு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓராண்டாக கணவரை பிரிந்துள்ள ரெபேக்கா, தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். விவாகரத்து கோரியும், மகளை தன்னுடன் அனுப்ப கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குழந்தையை ஒப்படைக்கும்படி கேட்டபோது, தரமறுத்த சதீஷ்குமார் தகராறு செய்ததோடு, ரெபேக்காவை தரக்குறைவாக திட்டியுள்ளார்.
இதில், விரக்தியடைந்த ரெபேக்கா, குழந்தையை மீட்டு தரக்கோரி ஓட்டேரி காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
குழந்தையை தன்னிடமிருந்து பிரித்து விடுவர் என்று நினைத்த சதீஷ்குமார், மகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.





மேலும்
-
ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை போராட்ட இடங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்
-
எப்.டி.ஐ., விதிமுறை மீறல்: இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு
-
இந்திய அணி பேட்டிங்; சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு
-
ஆஸி.யில் இந்தியர் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல்: இனவெறி காரணமா என விசாரணை
-
கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி