வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட தடை; 8,000 வீடியோக்களை அழிக்கவும் கோர்ட் உத்தரவு

பெங்களூரு: தர்மஸ்தலாவில், பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில், மஞ்சுநாதா கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினர் பற்றி செய்தி வெளியிட, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், தர்மஸ்தலாவில், பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் ஓடும் நேத்ராவதி ஆற்றின் கரையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளதாக, கோவிலின் முன்னாள் பணியாளர் பீமா அளித்த புகாரில், தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது.
'பேஸ்புக், யு - டியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், 'தர்மஸ்தலா பைல்ஸ்' என்ற பெயரில் விவாதம் நடக்கிறது. இதில், பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரத்தில், மஞ்சுநாதா கோவிலின் நிர்வாக அதிகாரியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினரை தொடர்புபடுத்தி பலரும் பேசுகின்றனர்.
இந்நிலையில், வீரேந்திர ஹெக்டேயின் சகோதரர் ஹர்ஷேந்திர குமார், பெங்களூரு 10வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்திற்கு எதிராக, 8,842 வீடியோக்கள் மற்றும் பதிவுகள் உள்ளன. அவர்களை பற்றி அவதுாறு செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.
இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி விஜய்குமார் ராய், மஞ்சுநாதா கோவில், வீரேந்திர ஹெக்டே, அவரது குடும்பத்தினர் தொடர்பாக செய்தி வெளியிட சமூக வலைதளங்கள், பத்திரிகைகள், செய்தி நிறுவனங்களுக்கு ஆக., 5ம் தேதி வரை தடை விதித்தார். மேலும், அவர்களுக்கு எதிராக வெளியான, 8,842 வீடியோக்கள், பதிவுகளை அழிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, 'தேர்ட் ஐ' என்ற யு - டியூப் சேனல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடக்கும் என தெரிகிறது.













மேலும்
-
ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை போராட்ட இடங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்
-
எப்.டி.ஐ., விதிமுறை மீறல்: இ-காமர்ஸ் நிறுவனம் மிந்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு
-
இந்திய அணி பேட்டிங்; சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு
-
ஆஸி.யில் இந்தியர் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல்: இனவெறி காரணமா என விசாரணை
-
கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி