வெள்ளி வென்றார் அன்கிதா: உலக பல்கலை., தடகளத்தில்

ரினே-ருஹ்ர்: உலக பல்கலை., விளையாட்டு 3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ்' ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அன்கிதா வெள்ளி வென்றார்.
ஜெர்மனியில், உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் நடந்தது. பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ்' ஓட்டத்தின் பைனலில் இந்தியா சார்பில் அன்கிதா பங்கேற்றார். பந்தய துாரத்தை 9 நிமிடம், 31.99 வினாடியில் கடந்த அன்கிதா, 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இது, இவரது சிறந்த செயல்பாடானது. இதற்கு முன், பந்தய துாரத்தை 9 நிமிடம், 39.00 வினாடி கடந்திருந்தார்.
பின்லாந்தின் இலோனா லோட்டா மாரியா (9 நிமிடம், 31.86 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றார். வெண்கலப் பதக்கத்தை ஜெர்மனியின் அடியா புட்டே (9 நிமிடம், 33.34 வினாடி) கைப்பற்றினார்.
இந்தியா 'வெண்கலம்': ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் லல்லு பிரசாத் போய், அனிமேஷ், மணிகண்டா, மிருத்யம் ஜெயராம் அடங்கிய இந்திய அணி, இலக்கை 38.99 வினாடியில் கடந்து 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது.
பெண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில் மஹிமா, மான்சி, முனிதா, ஷாலினி, சேஜல் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.
ஆண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில் இந்தியாவின் தேவ் குமார் மீனா (5.35 மீ.,) 5வது இடம் பிடித்தார்.
@quote@
உலக பல்கலை., விளையாட்டில் 2 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என, 12 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 20வது இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களை ஜப்பான் (34 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம்), சீனா (30 தங்கம், 27 வெள்ளி, 17 வெண்கலம்), அமெரிக்கா (28 தங்கம், 27 வெள்ளி, 29 வெண்கலம்) கைப்பற்றின. quote