அன்புமணி நடைபயணத்தை தடுக்க உள்துறை செயலருக்கு ராமதாஸ் கடிதம்

1

சென்னை: 'பா.ம.க., தலைவர் அன்புமணியின் நடைபயணத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


பா.ம.க.,வில், அப்பா - - மகன் மோதல் முடிவுக்கு வராத நிலையில், ராமதாஸ் பிறந்த நாளான, கடந்த 25ம் தேதி முதல், அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கட்சி நிறுவனர், தலைவரான தன் அனுமதியின்றி, அன்புமணி நடைபயணம் செல்வதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என, தமிழக டி.ஜி.பி.,யிடம் ராமதாஸ் மனு அளித்திருந்தார். ஆனாலும், நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி அளித்தது.




அதைத் தொடர்ந்து, தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமாருக்கு, ராமதாஸ் நேற்று கடிதம் எழுதி உள்ளார். பா.ம.க., செய்தி தொடர்பாளர் சாமிநாதன் இந்த கடிதத்தை, உள்துறை செயலரிடம் வழங்கினார்.அதில், 'பா.ம.க., தலைவராக, நான் பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறேன். ஆனால், என் அனுமதியின்றி, கட்சி பெயர், கொடி மற்றும் என் படத்தை பயன்படுத்தி, அன்புமணி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.



இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவரது நடைபயணத்திற்கான அனுமதியை, ரத்து செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.

Advertisement