'தமிழ் கற்போம் மையங்களில்' பிற மாநில குழந்தைகள் ஆர்வம்

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி 'தமிழ் கற்போம் மையங்களில்' பிற மாநில மாணவர்கள் ஆர்வமுடன் தமிழ் பயில துவங்கியுள்ளனர்.


மாநில அளவில் பல்வேறு பகுதிகளில், தென்னை நார் உட்பட பல்வேறு தொழிற்சாலைகளில் பிற மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் பணி செய்கின்றனர். அவர்களின் குழந்தைகள், அந்த தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.




கல்வியாண்டு தோறும் அவ்வாறுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.



நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 'தமிழ் கற்போம் மையம்' என துவக்கப்பட்டுள்ளது.



ஒவ்வொரு வட்டாரத்திலும், குறிப்பிட்ட அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, இந்த மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதில், பிற மாநில குழந்தைகளுக்கென ஹிந்தி அறிந்த சிறப்பு ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தில், 15 மையங்களில் 334 மாணவர்கள் படிக்கின்றனர். உடுமலை வட்டாரத்தில், பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் ஜே.என். பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் இந்த மையங்கள் உள்ளன. இரண்டு மையங்களிலும் மொத்தமாக, 45 மாணவர்கள் படிக்கின்றனர்.

தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'கல்வியாண்டு துவங்கியதும் இந்த மையம் துவக்கப்பட்டது. தற்போது மாணவர்கள் நாள்தோறும் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகின்றனர். ஆசிரியர்கள் அவர்களின் மொழியை புரிந்துகொண்டு, தமிழை அவர்களுக்கு புரியும் வகையில் கற்பிப்பதால் மாணவர்கள் எளிமையாக கற்றுக்கொள்கின்றனர்' என்றனர்.

Advertisement