விழுப்புரம் அதிவேக ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க முடிவு

சென்னை:சென்னை - விழுப்புரம் இடையிலான 'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டத்தை, புதுச்சேரி வரை நீட்டிக்க, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழும கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்போடு, 'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, சென்னை -- விழுப்புரம் 167 கி.மீ.,; சென்னை -- வேலுார் 140 கி.மீ.,; கோவை -- சேலம் 185 கி.மீ., வழித்தடத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 'செமி ஹை ஸ்பீடு ரயில் திட்டம்' குறித்து, போக்குவரத்து குழும செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது, சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் என திட்டமிடப்பட்டுள்ள வழித்தடத்தில் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, இந்த வழித்தடத்தை புதுச்சேரி வரை நீட்டிப்பது; இவ்விபரத்தை சாத்தியக்கூறு தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டத்தை சென்னை ஆலந்துார் அல்லது தாம்பரத்தில் இருந்து துவக்க முடிவு செய்ததாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement