ராகுல் கருத்தில் இருந்து மாறுபடும் காங்கிரஸ் எம்.பி.,க்கள்

17

புதுடில்லி: இந்திய பொருளாதாரம் இறந்த நிலையில் உள்ளதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறிய நிலையில், காங்கிரஸ் எம்.பி.,க்களான சசி தரூர் மற்றும் ராஜிவ் சுக்லா ஆகியோர் இந்திய பொருளாதாரத்தின் பலத்தை எடுத்துக் காட்டி உள்ளனர்.


அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்து இருந்தார். மேலும் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது இறந்த பொருளாதாரத்தை மேலும் கீழே கொண்டு செல்லட்டும்.இந்தியாவுடன் அமெரிக்கா மிக குறைவான வர்த்தகமே செய்கிறது. இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. எனத் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக ராகுல் நிருபர்களிடம் கூறுகையில், டிரம்ப் சரியாகத் தான் சொல்லி உள்ளார். அவர் உண்மையை சொல்லி உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் டிரம்ப் சொல்வது போலத்தான் இருக்கும் என்றார்.

ஆனால், காங்கிரஸ் எம்.பி.,க்கள் சசி தரூர் மற்றும் ராஜிவ் சுக்லா ஆகியோர் இதற்கு மாறான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சசி தரூர் கூறுகையில், இது மிகவும் சவால்மிக்க பேச்சுவார்த்தை. நாம் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பிரிட்டனுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.


அமெரிக்கா மட்டுமே நமது ஒரே வர்த்தக பங்குதாரர் அல்ல. அமெரிக்கா முற்றிலும் நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால், நாம் மற்ற சந்தைகளுக்கு திரும்ப வேண்டியிருக்கும். இந்தியாவின் வலிமை என்னவென்றால், நாம் சீனாவைப் போல ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அல்ல. நமக்கு வலுவான உள்நாட்டு சந்தை உள்ளது. நமது பேச்சுவார்த்தைக்குழுவிற்கு வலுவான ஆதரவு தேவை. நல்ல ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை எனில், நாம் விலகுவது சிறந்தது எனத் தெரிவித்து இருந்தார்.


மற்றொரு ராஜ்யசபா எம்.பி.,யான காங்கிரசை சேர்ந்த ராஜிவ் சுக்லா கூறும்போது,
இந்தியா மற்றும் ரஷ்யா பொருளாதாரம் இறந்துவிட்டது என டிரம்ப் சொல்வது தவறு. இந்திய பொருளாதாரம் இறக்கவில்லை. நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை செய்தனர். இந்த சீர்திருத்தங்களை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்னெடுத்து சென்றார்.

மன்மோகன் சிங் இதனை வலிமைப்படுத்தினார். தற்போதைய அரசும் அந்த பணியை செய்து வருகிறது. நமது பொருளதாரம் பலவீனமாக இல்லை. நம்மை பொருளாதார ரீதியாக முடித்துவிடலாம் என யாரேனும் கருதினால், அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் என்பது அர்த்தம். டிரம்ப் குழப்ப நிலையில் வாழ்கிறார். வரி விதிப்பது என்பது தவறு. தனக்கு விருப்பமான நாட்டுடன் வர்த்தகம் செய்ய அனைத்து நாடுகளுக்கும் உரிமை உண்டு. அதற்கு கட்டுப்பாடு விதிப்பது, பிரிக்ஸ் அமைப்புக்கு எதிராக பேசுவது, ரஷ்யா உடன் வர்த்தகம் மற்றும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது சரியான நடவடிக்கை அல்ல எனக்கூறியுள்ளார்.

ராகுலின் கருத்துக்கு நேர்மாறான கருத்துக்களையே காங்கிரஸ் எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.

மேலும் இண்டியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி வெளியிட்ட அறிக்கையில், ' இந்தியப் பொருளாதாரம் உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாகவும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் இருப்பதை அறிய போதுமான சட்டப்பூர்வமான தரவுகள் உள்ளன என்பதை ஒருவர் சொல்லத் தேவையில்லை. இதை ஒரு இறந்த பொருளாதாரம் என அழைப்பது ஆணவம் அல்லது அறியாமையால் மட்டுமே முடியும்.


இந்தியாவுக்கு பொருளாதார சவால்கள் உள்ளன. தனி நபர் வருமானத்தை அதிகரிக்க பணியாற்ற வேண்டும். சொத்து சமநிலையை சரி செய்ய பணியாற்ற வேண்டும். விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பிரசனையை சரி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பின்மை பிரச்னையை சரி செய்ய வேண்டும். ஆனால், பொருளாதார சவால்களை, இறந்த பொருளாதாரத்துக்கு சமமாக இருக்காது. ஒரு ஒப்பந்தத்தை முடிக்க துருப்பு போல் வடிவமைக்கப்பட்ட அறிக்கை என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராகுலின் கருத்துக்கு பா.ஜ.,வும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சி எம்.பி., அமித் மாளவியா கூறியதாவது; டிரம்ப்பின் அறிக்கையை எதிரொலிப்பதன் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தனது தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார். இது இந்திய மக்களின் அபிலாஷைகள் , சாதனைகள் நல்வாழ்வுக்கு அவமானம்.
உண்மையை சொல்ல வேண்டுமானால் இங்கு இறந்து கொண்டிருப்பது ராகுலின் அரசியல் நம்பகத்தன்மை மற்றும் பாரம்பரியம். சர்வதேசபொருளாதார மந்தநிலையின் போதும், இந்திய வேகமாகவளரும் பொருளாதாரமாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை உலக வங்கியும் ஐஎம்எப் அமைப்பும் உயர்த்தி உள்ளன.
யாருக்காக ராகுல் பேசி வருகிறார். இந்தியாவை தரம் தாழ்த்தும் வெளிநாட்டு பிரசாரத்தை அவர் மேற்கொள்வது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.


தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியதாவது:
இன்று இரண்டு காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கையை நான் பார்த்தேன். ஒருவர் நாட்டின் நலனுக்காக பேசுகிறார். மற்றொருவர், தனது கடல்கடந்த வெளிநாட்டு முதலாளிகளை மகிழ்விக்கும் வகையில் பேசுகிறார்.

இருண்ட வானத்தில் இந்தியா மட்டுமே ஒளிமயமான இடம் என உலகம் ஒப்புக் கொள்ளும் நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் வேறு விதமாக பேசுகிறார்.
ராகுல் தொடர்ந்து தனது அறியாமையை பதக்கமாக அணிந்து கொள்கிறார். இந்தியாவின் எழுச்சியை கண்டு கொள்ளாததுடன், வெளிநாட்டு குரல்களை எதிரொலிக்கும் வகையில் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement