பணித்தளத்தில் துாங்கியோரிடம் 8 போன்கள் திருடியவர் சிக்கினார்

நீலாங்கரை,கட்டுமான பணித்தளத்தில் துாங்கி கொண்டிருந்தவர்களின், 8 மொபைல் போன்களை திருடிய நபரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

இ.சி.ஆர்., அக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள், 28ம் தேதி இரவு, பணித்தளத்திலேயே துாங்கியுள்ளனர்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, 8 பேரின் மொபைல் போன்கள் திருடப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து, பாரதிதாசன், 28, உள்ளிட்டோர், நீலாங்கரை போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், துரைப்பாக்கத்தை சேர்ந்த செங்கோட்டையன், 29, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

நேற்று அவரை கைது செய்த போலீசார், 8 மொபைல் போன்கள் மற்றும் ஒரு பைக்கை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

Advertisement