ஹூப்பள்ளிக்கு 10 மெமு ரயில் மத்திய அரசிடம் வேண்டுகோள்

டில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நேற்று சந்தித்தார். அப்போது இவர், தார்வாட் உட்பட, பல்வேறு ஊர்களில் இருந்து ஹூப்பள்ளிக்கு, தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இவர்களின் வசதிக்காக 10 புதிய மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என, மத்திய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஹூப்பள்ளி சுற்றுப்புற ஊர்களுக்கு, வர்த்தக தலைநகர் போன்றதாகும். எனவே ஹூப்பள்ளிக்கு வர, ரயில் வசதி இருந்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த நகருக்கு 10 மெமு ரயில்களுடன், பயணியர் ரயில்களையும் இயக்க வேண்டும். கல்வி, மருத்துவ சிகிச்சை, வியாபாரம் என, பல்வேறு நோக்கங்களுக்காக, ஹூப்பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் உள்ளது. இவர்கள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் பயணியர் நெரிசல் அதிகம் உள்ளது. இதனால் பயணியருக்கு தொந்தரவு ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு புதிய பயணியர் ரயில்களை இயக்க வேண்டும்.

கொரோனா நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த, பயணியர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.

ஹூப்பள்ளி ரயில் நிலையத்தை, சர்வதேச தரத்துக்கு உயர்த்துவது அவசியம் என, மத்திய அமைச்சரிடம் அறிவுறுத்தினார். அதே போன்று மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் சோமண்ணாவும் கூட, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




- நமது நிருபர் -

Advertisement