விழுப்புரம் பைபாஸ் மேம்பாலத்தில் விபத்து... அபாயம் : நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை

விழுப்புரம்: விழுப்புரம் ஜானகிபுரம் ரவுண்டானா மேம்பாலத்தில் தொடரும் குழப்ப நிலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு செல்கின்றனர். எதிர்திசையில் வாகனங்கள் பயணிப்பதை தவிர்க்க நிரந்தர தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம்-நாகப்பட்டினம் புதிய நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டப்பணிகள் படிப்படியாக முடித்து, சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பில், மிகப்பெரிய ரவுண்டான பாலம் கட்டப்பட்டு, நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை, திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலைகள் இணைக்கப்பட்டுள்ளது.
ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பில் தொடக்கத்தில் டிரம்பெட் வடிவில் இந்த பாலம் திட்டமிடப்பட்டது. பிறகு விபத்துகளை தவிர்க்கும் விதத்தில் திட்டத்தை மாற்றி, ரவுண்டானா பாலமாக கட்டப்பட்டது.
ஒருபுறம் சென்னை-திருச்சி மார்க்கங்களுக்கு இரண்டு மேம்பாலங்கள் நேரடியாக சந்திக்கும் விதத்திலும், மறுபுறம் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை வந்து இணையும் விதத்திலும், மிகப்பெரிய ரவுண்டானா பாலாமாக கட்டியமைத்துள்ளனர்.
இந்த பாலம் கட்டமைப்பு தொடக்கம் முதலே குழுப்பம் மிகுந்தவையாக அமைந்தது. சர்வீஸ் சாலையை நீண்ட தொலைவு சுற்றிவிட்டதால், இதனை சுற்றியுள்ள கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடரும் குழப்பம் இந்த ரவுண்டானாவில், சென்னை-திருச்சி மார்க்க வாகனங்கள், நேரடியாக இரட்டை மேம்பாலங்கள் வழியாக செல்கின்றன.
விழுப்புரம்-புதுச்சேரி, நாகை மார்க்க வாகனங்கள், விழுப்புரத்திலிருந்து இந்த பாலத்திற்கு வந்து, வலது புறம் எதிர் திசையில் திரும்பி, ஆபத்தான வகையில் பாலத்தின் கீழ் சென்று, பிறகு இடது புறம் திரும்பி பாலத்தின் மீது ஏறி செல்ல வேண்டியுள்ளது.
இதே போல், இந்த பாலத்திற்கு அருகே உள்ள கண்டமானடி, கொளத்துார், அரியலுார் உள்ளிட்ட கிராமத்தினரும், பாலத்தின் கீழ் எதிர் திசை சாலையில் பயணித்து, பிறகு பாலத்தை கடந்து சென்று, மீண்டும் பாலத்திற்கு கீழ் உள்ள சர்வீஸ் சாலை வழியாக அந்த கிராமங்களுக்கு சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும்.
இதனால், இந்த கிராம வாகன ஓட்டிகள் எதிர் திசையில் (நாகப்பட்டினம் சாலையில்) சென்று, ஆபத்தான வகையில் செல்வதால் விபத்துகள் நடந்து வருகிறது.
திருச்சியில் இருந்து விழுப்புரம் வரும் வாகனங்களும், நாகை, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வரும் வாகனங்களும், பாலத்தின் கீழ் வந்து, இடதுபுற சர்வீஸ் சாலை வழியாக விழுப்புரம் செல்கிறது. அப்போது பாலத்தின் கீழ் நாகை செல்லும் வாகனங்களும் ஒரே குறுகிய சாலையில் எதிரும் புதிருமாக செல்லும் வகையில் குழப்பமான முறையில் சாலை வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ரவுண்டானா பாலத்தின் நான்கு வழிகளிலும் தகவல் பலகைகள் குறிப்பிட்ட இடங்களில் அமைக்காததாலும், குழப்பத்தாலும், வெளியூர் வாகன ஓட்டிகள் தினசரி குழப்பத்தில் சிக்கி தவிக்கின்றனர். சர்வீஸ் சாலைகள் மற்றும் பாலத்தின் கீழ் இறங்கி சென்று, அங்குள்ள ரோந்து போலீசார் மற்றும் பொது மக்களிடம் நின்று வழிகேட்டு செல்லும் அவலம் தொடர்கிறது.
தீர்வு தேவை இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி, நாகை செல்லும் வாகனங்கள், விதிகள் படி இடதுபுறம் சாலையில் சென்று, இடதுபுறம் திரும்பும் மேம்பாலத்தின் மீது ஏறி செல்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மாற்றியமைப்பதே இதற்கு தீர்வாக அமையும் என்று உள்ளூர் போலீசார் கூறி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், எதிர் திசையில் ஆபத்தாக பயணிக்கும் குழுப்பமான நிலையை தடுக்க வேண்டும், மேம்பாலத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மேலும்
-
மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்
-
பாகிஸ்தானில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது: 15 நாட்களில் 3வது விபத்து
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
'நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும்'
-
குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்