அணுக்கரு உலையில் தங்கம் தயாரிக்கும் நுட்பம்!

அந்த காலத்தில், ரசவாதிகள், இரும்பிலிருந்து தங்கம் தயாரிக்க முயன்றனர். ஆனால், மராத்தான் ஃபியூஷனின் (Marathon Fusion) விஞ்ஞானிகள், நிஜமாகவே, அணுக்கரு இணைவு (Nuclear Fusion) மூலம் தங்கத்தை தயாரிக்க முடியும் என்று சொல்கின்றனர். எப்படித் தெரியுமா?

டோகாமாக் என்ற உலையில், செறிவூட்டப்பட்ட மெர்க்குரி--198ஐயும் அணுக்கரு பிணைப்பின் போது உருவாகும் நியூட்ரான்களையும் பயன்படுத்தி, இந்த உலை ஒரு ஜிகாவாட் துாய மின்சாரம் தயாரிக்கும்.

அந்த வேதிவினையின் பக்க விளைவாக ஐந்து டன் தங்கத்தை உற்பத்தி செய்யலாம் என மராத்தான் ஃபியூஷன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அணுப் பிணைப்பு உலையின் உட்சுவர்களில், வழக்கமான லித்தியத்தை பூசுவதற்கு பதிலாக, மெர்க்குரி--198ஐ பூசுகின்றனர்.

பிணைப்பின் போது உருவாகும் நியூட்ரான்கள், ஒரு சிதைவு சங்கிலியைத் துாண்டி, நிலையில்லா மெர்குரி--197ஐ தங்கம்--197 ஆக மாற்றுகின்றன.

பிறகு தங்கத்தை எளிய வேதியியல் முறை வாயிலாகப் பிரித்தெடுக்க முடியும். அணுப் பிணப்பு உலையில் ஏராளமாகக் கிடைக்கும் மின் ஆற்றலோடு, தங்கமும் கிடைப்பதுதான் ஆச்சரியம். ஒரு ஜிகாவாட்--ஆண்டுக்கு, தோராயமாக 4,734 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கிடைப்பது, பொருளாதார ரீதியாக பிரமிக்க வைக்கிறது. இது வெறும் ஆய்வக சோதனை அல்ல; இது உலை அளவில் தங்கம் தயாரிக்கும் முறை.

இந்த கண்டுபிடிப்பு இன்னும் சக வல்லுநர்களின் மதிப்பாய்வில்தான் இருக்கிறது. ஆனால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், அணுக்கரு பிணைப்பு உலைகளுக்கு , தாராள நிதிகள் கிடைக்கும். தவிர, மதிப்புமிக்க உலோக உற்பத்தி முறைகள் அடியோடு மாறக்கூடும்.

ரசவாதிகள் கனவு கண்ட, தங்கம் செய்யும் வித்தை, இப்போது கடின அறிவியலால் நனவாகப் போகிறது.

Advertisement