சிகரெட் வடிகட்டிகளால் ஆன புதிய சாலைகள்!

விரைவில், சிகரெட் துண்டுகள், அவை சிதறிக் கிடக்கும் சாலைகளையே பலப்படுத்தக்கூடும். கிரனாடா மற்றும் போலோனா பல்கலை ஆராய்ச்சியாளர்கள், செல்லுலோஸ் மற்றும் பிஎல்ஏ (PLA) நிறைந்த மின்னணு சிகரெட் வடிகட்டிகளை (e--cigarette filters) அதிக செயல்திறன் கொண்ட நிலக்கீல் (Asphalt) குளிகைகளாக மாற்றியுள்ளனர். மறுசுழற்சி செய்யப்பட்ட நிலக்கீலும் பிட்டுமெனும் (Bitumen) கலக்கும் போது, வலுவூட்டும் இழைகள் உருவாகின்றன.

இதன் விளைவாக கிடைக்கும் மேம்பட்ட நிலக்கீல், குறைந்த வெப்பநிலையில் உருக்கி, சாலையில் ஊற்ற முடியும். அப்படி ஊற்றப்பட்ட பொருள், நெகிழ்வுத்தன்மையோடு இருப்பதால், சாலையில் படிந்து, பிறகு கெட்டித் தன்மையுள்ளதாக மாறுகிறது. 'கன்ஸ்ட்ரக்சன்ஸ் அண்டு பில்டிங் மெட்டீரியல்ஸ்' இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கழிவு மேலாண்மையை ஒரு பொருளறிவியல் வெற்றியாக மாற்றுகிறது.

சிகரெட் கழிவுகள் இப்போது அதிகரித்து வருகின்றன. மேலும், அவற்றை சேகரிப்பது மிகவும் சவாலாகவே இருக்கிறது. அப்படியும், சேகரிக்கப்படும் சிகரெட் கழிவுகள் குப்பை மேட்டில் எரித்துச் சாம்பலாக்கப்படுகின்றன. ஒரு புறம் சிகரெட் பழக்கத்தை நிறுத்த, பிரசாரம் நடக்கிறது. அந்தப் பழக்கம் நிற்கும் வரை, இருக்கிற சிகரெட் கழிவுகளை, சாலைகளாக மாற்றுவது நல்ல யோசனைதான்.

சுற்றுச்சூழலுக்கு இசைவான இந்தக் கண்டுபிடிப்பு வெறும் கழிவு மேலாண்மை மட்டுமல்ல. பயனுள்ள மதிப்புக்கூட்டலாகவும் உள்ளது.

Advertisement