பவானிசாகர் அணையில் பரிசல் கவிழ்ந்து 2 பேர் பலி

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில், வாழைத்தார் ஏற்றி வந்த பரிசல் கவிழ்ந்ததில், இரு தொழிலாளர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். நீச்சல் தெரிந்த ஒரு தொழிலாளி தப்பினார்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 101 அடியை எட்டியுள்ளதால், நீர்த்தேக்க பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கும் தருவாயில் உள்ள மரங்களிலிருந்து தார்களை வெட்டி எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வகையில், அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள ஒத்த பனைமரக்காடு கிராமத்தில் வாழைத்தார்களை வெட்ட, பவானிசாகர், கோடேபாளையம் மணிகண்டன், 18, சத்தியமங்கலம், வடவள்ளி சுரேஷ், 38, சத்தியமங்கலம், கரட்டூர் சக்தி, 32, ஆகியோர், பரிசலில் நேற்று காலை சென்றனர்.

வாழைத்தார்களை வெட்டி எடுத்துக்கொண்டு, வால்கரடு நோக்கி மதியம் புறப்பட்டனர். ஆடி காற்று பலமாக வீசியதாலும், வாழைத்தார் எடை அதிகமாக இருந்ததாலும், பரிசல் நீர்த்தேக்க பகுதியில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், மூவரும் தண்ணீரில் மூழ்கினர்.

சக்திக்கு நீச்சல் தெரிந்ததால், நீச்சலடித்து கரை சேர்ந்தார். மற்ற இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். சக்தி தகவலில், மீனவர்கள் மற்றும் மக்கள், இருவரின் உடல்களையும் மீட்டனர். பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

அணை நீர்த்தேக்க பகுதியில் வாழைத்தார் வெட்டும் பணி வழக்கமாக நடந்தாலும், பரிசல் கவிழ்ந்த விபத்து இதுவே முதல்முறை என, உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

Advertisement