உமர் அப்துல்லா ஓட்டம்: ராகுல் வாட்டம்

16


காந்திநகர்: ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சமீபத்தில், குஜராத் சென்றார். பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், காஷ்மீர் செல்லும் சுற்றுலா பயணியர் குறைந்துவிட்டனர்.


இதை சமாளிக்கவும், தன் மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சியடையவும் குஜராத் சென்றிருந்தார் ஒமர். சுற்றுலாத்துறை தொடர்பான அரசு மற்றும் தனியார் அமைப்புகளை சந்தித்து, 'காஷ்மீரில் அமைதி நிலவுகிறது; எனவே, குஜராத்தில் இருந்து சுற்றுலா பயணியர் அங்கு வர வேண்டும். அத்துடன், குஜராத்திற்கும், ஜம்மு - காஷ்மீருக்கும் இடையே, பொருளாதார ரீதியாக நல்ல உறவு உள்ளது' என, பேசி உள்ளார்.

அதன்பின், சபர்மதி ஆசிரமத்தில் உள்ள காந்தி சிலைக்கும், ஒற்றுமையை பிரதிபலிக்கும் சர்தார் வல்லபபாய் படேல் சிலை உள்ள இடத்திற்கும் சென்று மரியாதை செய்துள்ளார். தினமும் காலையில், 'ஜாகிங்' செய்வதை வழக்கமாகக் கொண்டவர் ஒமர். காலையில், குஜராத் தலைநகர் ஆமதாபாதின், சபர்மதி நதிக்கரை வழியாக ஜாகிங் மேற்கொண்டார்; இதை சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார்.



இதைப் பார்த்த பிரதமர் மோடி, உடனே, சமூக வலை தளத்தில், 'கேவடியாவில் உள்ள சர்தார் படேல் சிலைக்கு மரியாதை செய்து, தேசத்தின் ஒற்றுமைக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்' என பதிவிட்டு, ஒமரைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். இது குறித்து ராகுலிடம் கேட்டபோது, 'ஒமர், பா.ஜ., பக்கம் சென்றுவிட்டார்' என்றார். ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இப்போது ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது.


மீண்டும், மாநில அந்தஸ்து கொண்டு வரவே, ஒமர், பா.ஜ.,வுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல செயல்படுகிறார். தெலுங்கானாவை பிரிக்க, சந்திரசேகர் ராவும் இப்படித்தான் பா.ஜ.,வை ஆதரித்தார். ஆனால், தெலுங்கானா தனி மாநிலமாக ஆன பின், பா.ஜ.,வை உதைத்து தள்ளிவிட்டார்' என, வேறு மாதிரி கூறினாராம்.

Advertisement