அதிகளவிலான எல்லைகளால் தாலுகா போலீசார்... திணறல்; மறுவரையறை செய்ய நடவடிக்கை தேவை

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லை பரப்பளவு அதிகமாக இருப்பதால் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதிலும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் போலீசார் திணறி வருகின்றனர். மாவட்ட தலைநகரமான விழுப்புரம் நகராட்சியில் தாலுகா, மேற்கு மற்றும் நகரம் ஆகிய மூன்று காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், நகர காவல் நிலைய எல்லையில் நகராட்சியின் 13 வார்டுகள், மேற்கு காவல் நிலைய எல்லையில் 9 வார்டுகள் மற்றும் தாலுகா காவல் நிலையத்தில் 19 வார்டுகள் உட்பட 60 கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.
தாலுகா காவல் நிலைய எல்லையில் நகராட்சி வார்டுகள் மற்றும் கிராமங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் அதிகம் உள்ளன.
இந்த காவல் நிலைய எல்லையில் அதிக குற்றங்கள் நடக்கும் பகுதிகள் மற்றும் ரவுடிகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இக்காவல் நிலையத்தில் 40 ரவுடிகள் பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கோர்ட், புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளதோடு, அரசியல் கட்சிகளின் மாநாடு, போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவை இக்காவல் நிலைய எல்லையில் அதிகளவில் நடந்து வருகிறது.
இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 80 போலீசார் பணியிடம் ஏற்படுத்தப்பட்டு பணியில் உள்ளனர்.
இந்த போலீசார் தினந்தோறும் கலெக்டர் அலுவலகம், கோர்ட், ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு பணி மற்றும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் மீட்டு பணிகளில் ஈடுபடுவதற்கு நேரம் கடந்துவிடுகிறது.
இதனால், காவல் நிலைய எல்லையில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும், கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இதனால், இக்காவல் நிலைய எல்லையை பிரிக்க அல்லது மறுவரையறை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
நகர மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் பெரியதாக பிரச்னைகள் நடக்கும் பகுதிகள் ஏதும் இல்லை. மேற்கு காவல் நிலைய எல்லையில் சாராயம் மற்றும் நகர காவல் நிலைய எல்லையில் மோதல், அடிதடி ஆகியவை மட்டுமே பிரதான பிரச்னையாக உள்ளது.
இதனால், தாலுகா காவல் நிலைய எல்லையில் உள்ள பெருந்திட்ட வளாகம், புதிய பஸ் நிலையம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்து மேற்கு மற்றும் நகர காவல் நிலையத்துடன் இணைக்கலாம். அப்படி இணைத்தால், தாலுகா காவல் நிலைய எல்லையில் குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தாலுகா காவல் நிலைய எல்லையை மறுவரையறை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும்
-
கொட்டகை அமைத்து வியாபாரம் 'பலே' ஆடு திருடர்கள் மூவர் கைது
-
அரசு பள்ளி முன் தேங்கிய கழிவுநீரால் சுற்றுச்சுவரில் ஏறி சென்ற மாணவர்கள்
-
தேர்வாய்கண்டிகை சிப்காட் செல்ல மாற்று ஏற்பாடு...விமோசனம்: ரூ.21 கோடியில் கவரைப்பேட்டை சாலை விரிவாக்கம் ;பெரியபாளையம் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
-
அரசு பள்ளிகளுக்கு இடையே மாவட்ட விளையாட்டு போட்டி
-
பயங்கரவாதிக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீதான வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
-
சின்னகாவனம் விநாயகர் கோவில் அகற்றம் சாலை விரிவாக்க பணிக்காக நடவடிக்கை