2 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்த கேரள டாக்டர் காலமானார்!

11

கண்ணூர்: கேரளாவில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ஏகே ரைரு கோபால் இன்று காலமானார். அவருக்கு வயது 80.


கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ரைரு கோபால். இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.2க்கு மருத்துவம் பார்த்து வந்தார். பிற டாக்டர்கள் ஒருமுறை மருத்துவ ஆலோசனை வழங்க ரூ.100க்கும் அதிகமாக கட்டணம் வசூலித்து வந்த நிலையில், இவரது சேவை ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.


நோயாளி ஒருவரின் வீட்டுக்குச் சென்று சிகிச்சை அளித்த போது, அங்கு காணப்பட்ட கொடுமையான நிலைமையை கண்டு, இந்த மருத்துவ சேவைப் பயணத்தை தொடங்கினார். கூலி தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் மாணவர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.


தினமும் அதிகாலை 2.15 மணிக்கு தூங்கி எழும் அவர், பசு மாடுகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார். அதன்பிறகு, பால் கறந்து, அதனை விநியோகித்த பிறகு, காலை 6.30 மணி முதல் தனது கிளினிக்கில் மருத்துவ சேவையை தொடர்வார். தேவைப்பட்டால், அதிகாலை 3 மணி முதலே மருத்துவ சிகிச்சை அளிப்பார். நாளொன்றுக்கு 300 பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவார்.


இவரிடம் மருத்துவ சிகிச்சை பெற தினமும் 100 பேர் வரிசையில் நிற்பார்கள். இவரது மனைவி சகுந்தலா இவருக்கு துணையாக இருந்து வந்துள்ளார். கூட்டத்தை கவனித்தல், மருந்துகளை வழங்குதல் போன்ற உதவிகளை செய்து வந்தார். தனது உடல்நிலை மோசமடைந்த போதும், மருத்துவ சேவை வழங்குவதை அவர் நிறுத்தவில்லை.


இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மக்கள் மருத்துவர் என்று போற்றப்பட்ட ரைரு கோபால் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மருத்துவம் என்பது தற்போது வியாபாரமாகி விட்ட நிலையில், அதனை பொதுச் சேவையாக செய்து வந்த இவரது மறைவு, பொது மக்களுக்கு பேரிழப்பாகும்.




@block_Y@

முதல்வர் இரங்கல்



இதனிடையே, டாக்டர் ரைரு கோபாலின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்; அனைவருக்கும் மருத்துவம் கிடைக்கும் விதமாக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளித்து வந்தார். இவ்வளவு குறைந்த கட்டணத்திற்கு அவர் வழங்கிய மருத்துவ சேவை, பல ஏழை நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார். block_Y

Advertisement