கர்நாடகாவில் 19 மயில்கள் மர்மமான முறையில் இறந்தது; வன ஆர்வலர்கள் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் ஹனுமந்தபுராவில் 19 மயில்கள் மர்மமான முறையில் இறந்தது வனவிலங்கு பாதுகாப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகாவில், உள்ள ஹனுமந்தபுரா கிராமத்தில் இந்தியாவின் தேசியப் பறவையான 19 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. விவசாய நிலத்தை ஒட்டியுள்ள கெரே கோடி நீர்வீழ்ச்சிக்கு அருகில் 5 ஆண் மயில்கள் மற்றும் 14 பெண் மயில்கள் உட்பட வயல்களில் சிதறிக் கிடந்தன.


இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் வன விலங்குகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியது. கால சூழ்நிலை காரணமாக, மயில்கள் இறந்திருக்கலாம் என்று கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் சரியான காரணம் தெரியவில்லை.


உயிரிழந்த மயில்களின் உடல்களை பரிசோதனைக்காக, வனத்துறை அதிகாரிகள் சேகரித்தனர். உள்ளூர் நீதிபதியின் அனுமதியைப் பெற்ற பிறகு, இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய சோதனைகள் மேற்கொள்ளப்படும்.


ஜூலை 2ம் தேதி, சாமராஜ்நகர் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் 20 குரங்குகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. வன மற்றும் காவல்துறை அதிகாரிகள் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர், மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது மர்மமான முறையில் உயிரிழந்த 20 மயில்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

Advertisement