ஓவல் டெஸ்ட்: இந்தியா வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்

2

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் அசத்திய இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. தொடர் 2-2 என சமன் ஆனது. இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன் எடுத்தன. இந்திய அணி 2வது இன்னிங்சில் 396 ரன் குவித்தது. பின், 374 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 339/6 ரன் எடுத்திருந்தது. ஜேமி ஸ்மித் (2) அவுட்டாகாமல் இருந்தார்.


சிராஜ் அசத்தல்: இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட், இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய ஆட்டத்தின் முதலிரண்டு பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஜேமி ஓவர்டன். சிராஜ் 'வேகத்தில்' ஜேமி ஸ்மித் (2), ஜேமி ஓவர்டன் (9) வெளியேறினர். பிரசித் கிருஷ்ணா பந்தில் ஜோஷ் டங்க் (0) போல்டானார்.இங்கிலாந்து வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் கைவசம் இருந்த நிலையில், தோள்பட்டை காயத்தை பொருட்படுத்தாது கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார். சிராஜ் பந்தில் அட்கின்சன் (17) போல்டானார்.
இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 367 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் முகமது சிராஜ் 5, பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement