ஓவல் டெஸ்டில் திரில் வெற்றி: தொடரை சமன் செய்தது இந்தியா

9

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக பரபரப்பாக நடந்த 5 வது டெஸ்டில் 6 ரன்னில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி இருந்தது. ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 23 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 396 எடுத்தது. அதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு 374 ரன்னை இலக்காக நிர்ணயித்தது.

அதை தொடர்ந்து 2 வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி ஆடத்துவங்கியது.
துவக்க ஆட்டக்காரர்களான, க்ராவ்லே 14 ரன்களுக்கு சிராஜ் பந்தில் வெளியேறினார்.

சிறப்பாக விளையாடிய, பென் டக்கெட், அரைசதம் கடந்து 54 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட் ஆனார்.
அதை தொடர்ந்து போப் சிராஜ் பந்தில் அவுட்டாகி 27 ரன்களுக்கு வெளியேறினார்.

ஜோ ரூட், ஹேரி புரூக் சதம்:

அடுத்துவந்த ஜோ ரூட், ஹேரி புரூக் இருவரும் நிலைத்து நின்று விளையாடி இந்திய பந்துவீச்சை சமாளித்து பவுண்டரிகளாக விளாசினர்.

அபாரமாக ஆடிய புரூக் 111, டெஸ்டில் தனது 10வது சதம் அடித்தார். இத்தொடரில் இவரது இரண்டாவது சதம்.

ஆகாஷ் தீப் பந்தில் 2 ரன் எடுத்த ரூட், டெஸ்ட் அரங்கில் 39வது சதம் எட்டினார். பெத்தல் (5) நிலைக்கவில்லை. சிறிது நேரத்தில் கிருஷ்ணா பந்தில் ரூட் 105 ரன்னில் அவுட்டாக 'டென்ஷன்' ஏற்பட்டது. தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 339/6 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஜேமி ஸ்மித் (2) அவுட்டாகாமல் இருந்தார்.

இந்நிலையில் 5வது நாள் ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் பந்துவீச்சில் அபாரமாக பந்துவீச,இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இங்கிலாந்து அணி, 367 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.


இந்திய தரப்பில் சிராஜ், 5 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழத்தினர்.

Advertisement