வெளிநாட்டில் பட்டப்படிப்பு: பெற்றோருக்கு ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை!

சென்னை: ''வெளிநாடுகளில் பட்டப்படிப்பு என்ற பெயரில், இளைஞர்களை கடன் சுமைக்கு ஆளாக்க கூடாது,'' என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
ஸோஹோ கார்ப்பரேசன் என்பது, பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். வர்த்தக மென்பொருட்களை தயார் செய்கிறது. பல்வேறு உலக நாடுகளில் இதன் கிளைகள் செயல்படுகின்றன. இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானியான ஸ்ரீதர் வேம்பு தமது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் உள்ள சிறிய கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவர் முதுகலை பட்டப்படிப்புக்காக ரூ. 70 லட்சத்தை 12 சதவீதம் வட்டிக்கு வாங்கி உள்ளார். இது ஒரு அபாய அழைப்பு.
தகவல் தொழில்நுட்பத்துறையில் (ஐடி) வேலைவாய்ப்பு நிலவரம், குறிப்பாக வெளிநாட்டு மாணவர்களுக்கு இப்போது மோசமாக இருக்கிறது. அதுவும், கடனுக்கு செலுத்த வேண்டிய தவணைகளும் விரைவிலேயே தொடங்கி விடுகின்றன.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சகாப்தத்திற்காக நாம் நம்மை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு ஏற்ப பணியாளர்களை நாங்கள் பணி அமர்த்தவில்லை. யாரையும் பணி நீக்கம் செய்யக்கூடாது என்ற கொள்கை காரணமாக, பணி அமர்த்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.
வெளிநாட்டில் பட்டப்படிப்பு படிப்பதற்காக அதிகமாக கடன் வாங்குவதில் மாணவர்கள், பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவிலும் பட்டப்படிப்புகளை படிக்க அதிக கடன் வாங்குவது விவேகமற்றதும் கூட.
கல்வியின் பெயரில் இளைஞர்களை கடன் சுமையில் சிக்க வைக்கக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். வேலை வழங்குவோரே பயிற்சித் திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும். பட்டப்படிப்புகளை ஏற்காமல் இதுபோன்ற பயிற்சித் திட்டங்களை தொழில் துறையினர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் சிறந்த முதலீடு என்பது ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடே ஆகும். எனவே, இளைஞர்கள் கடனில் சிக்காமல் இருக்க நிறுவனங்கள் இதை பரவலாக செய்வார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.











மேலும்
-
உலகின் பெரிய விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 5வது இடம்!
-
இந்தியாவுக்கான வரியை உயர்த்துவேன்: எல்லை மீறும் டிரம்ப் மிரட்டல்
-
மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர் பஞ்சர்; பழுது பார்க்க 4 மணி நேரம் ஆனதால் பயணிகள் அவதி
-
கொட்டும் மழையில் இபிஎஸ், நயினார் பிரசாரம்
-
கின்னஸ் சாதனை படைத்தது பரிக்சா பே சர்ச்சா 2025 நிகழ்வு; 3.53 கோடி பேர் பதிவு
-
உலகம் முழுவதும் பிரபலமாகிவரும் 'கேமல் மில்க்'...