அயர்லாந்தில் மேலும் ஒரு இந்தியர் மீது தாக்குதல்!

1

டப்ளின்: அயர்லாந்தில் மேலும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


லக்வீர் சிங் (40) என்பவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் அயர்லாந்தில் 23 ஆண்டுகளாக அயர்லாந்தில் வசித்து வருகிறார். 10 ஆண்டுகளாக டாக்சி டிரைவராக உள்ளார்.


பாலிமுன் என்ற பகுதியில் சம்பவத்தன்று 20 முதல் 21 வயது கொண்ட இரு வாலிபர்கள் லக்வீர் சிங் காரில் ஏறி உள்ளனர். அவர்கள் இருவரும் போப்பின்ட்ரீ என்ற இடத்திற்கு செல்லுமாறு கூற, லக்வீர் சிங் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.


அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த தருணத்தில், வாலிபர்கள் இருவரும் காரின் கதவுகளை திறந்து கீழே இறங்கி உள்ளனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் லக்வீர் சிங் தலையில் பாட்டிலால் கடுமையாக தாக்கி உள்ளனர். இந்தியாவுக்கே திரும்பி போ என்று ஆவேசத்துடன் கத்திய படி அவர்கள் தாக்கி இருக்கின்றனர்.


ஒரு கணம் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அடுத்த விநாடி இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரத்தம் சொட்ட, சொட்ட அங்குள்ள வீடுகளின் கதவுகளை லக்வீர் சிங் தட்டி உதவி கோரி உள்ளார்.


ஆனால், எதற்கும் பலன் இல்லாமல் போகவே, ஒரு கட்டத்தில் அயர்லாந்து காவல்துறை அவசர உதவி எண்ணான 999க்கு டயல் செய்துள்ளார். பின்னர், விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திவிட்டு, தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அண்மையில், டல்லாட் பகுதியில் ஒரு மர்ம கும்பலால் 40 வயது இந்தியர் மீது இனவெறி தாக்குதல், டப்ளினில் 32 வயது இந்தியா வம்சாவளி தொழிலதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது 3வது முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தாக்கப்பட்டுள்ளார்.

Advertisement