தெலுங்கானா இட ஒதுக்கீடு: காங்கிரஸ் கட்சியினர் தர்ணா!

1

புதுடில்லி: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சித் துறைகளில் பின்தங்கிய வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரி, காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பிரதிநிதிகள் டில்லியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பதிவிட்டுள்ளதாவது:

பிற்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளிப்பது அவசியமாகிறது. இதன் அடிப்படையில் டில்லியில் தர்ணா நடைபெற்றது.

ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட, சமூக நீதிக்கான அரசியலமைப்பின் தொலைநோக்கு பார்வையை நோக்கிய ஒரு பெரிய முன்னேற்றமாக இந்தச் சட்டம் உள்ளது.

டில்லியில் நடைபெற்ற தர்ணாவுக்கு தங்கள் ஆதரவைக் குரல் கொடுத்த இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கவனத்தில் கொண்டு ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறேன்.
இந்தப் போராட்டம் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த இந்தியர்களுக்கு அதிகாரத்திலும் முன்னேற்றத்திலும் அவர்களின் உரிமைப் பங்கு இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு கூட்டுப் போராட்டம்.

இவ்வாறு ராகுல் பதிவிட்டதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement