உலகத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு அதிகம்: டிரம்ப்புக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதில்

12

மும்பை: இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் எனக்கூறிய டிரம்ப்புக்கு பதிலளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, ' உலக வளர்ச்சிக்கு அமெரிக்காவை விட இந்தியா அதிக பங்களித்து வருகிறது,' எனக்கூறியுள்ளார்.


ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், 'இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் ' எனக்குறிப்பிட்டார்.


மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகிதம் குறித்து அறிவித்தார். தொடர்ந்து இந்திய பொருளாதாரம் தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. உலகின் வளர்ச்சிக்கு அமெரிக்காவை விட இந்திய அதிக பங்களிப்பு அளித்து வருகிறது. இந்தியாவின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் பங்கு குறைவானதாகவே இருக்கும். 11 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருக்கும் என கணிக்கிறோம். இந்திய பொருளாதாரம் இன்னும் வளரும்.

ஐஎம்எப் கணிப்பின்படி உலக பொருளாதாரம் 3 சதவீதம் மட்டுமே வளரும். ஆனால், இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் வளரும் என கணித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement