ஜாதி ரீதியாக ஒதுக்கப்படுகிறேனா இல்லையான்னு நான் தான் சொல்லணும்; அன்புமணிக்கு துரைமுருகன் 'சுளீர்'

4

வேலூர்: 'ஜாதி ரீதியாக ஒதுக்கப்படுகிறேனா இல்லையான்னு நான் தான் சொல்லணும், அன்புமணி சொல்லக்கூடாது' என அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்தார்.


@1brவேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நீர்வள அமைச்சர் துரைமுருகன் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா, குடும்ப அட்டை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் கேள்விகளுக்கு துரைமுருகன் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:

கேள்வி: அன்புமணி நீங்க பழையதாக கட்டிய தடுப்பணை பற்றி நான் பேசவில்லை. நீங்க 4 ஆண்டில் கட்டிய தடுப்பணை பற்றி தான் பேசியிருக்கிறேன் என கூறியுள்ளரே?

துரைமுருகன் பதில்; நான் அறிக்கையில் நன்றாக போட்டு இருக்கிறேன். கருணாநிதி தொடங்கி இன்றைய முதல்வர் வரையிலான காலத்தில், கட்டப்பட்ட அணைகள் என வரிசையாக எழுதி இருக்கிறேன். அதை அவர் சரியாக படிக்கவில்லை. படிக்காமல் பேசுகிறார் என்று நினைத்து விட்டு விட்டேன். இல்லனா இது, பண்ணி இருப்பேன்.

கேள்வி: எங்களுடைய சமூகத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் துரைமுருகன். அதனால் தான், அந்த சமூகத்தின் காரணமாக, திமுகவில் ஒதுக்கப்படுகிறார் என அன்புமணி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்?

துரைமுருகன் பதில்: ஒதுக்கப்படுகிறனா இல்லையா என்று சொல்வது நான், அவர் இல்லை. அவர் அவரது அப்பாவுக்கு சொன்னால் போதும்.

கேள்வி: 'பாஜவுக்கு நாங்கள் அடிமை என ஸ்டாலின் அடிக்கடி சொல்கிறார். நாங்கள் கூட்டணி வைத்தாலும் எங்களது கொள்கை வேறு, பாஜகவின் கொள்கை வேறு' என இபிஎஸ் கூறியுள்ளார்?

துரைமுருகன் பதில்: அவர் சொன்னால் அவரிடம் தான் கேட்க வேண்டும், என்னிடம் கேட்டால்...?

கேள்வி: ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சியினர் கூறியுள்ளனர். ஆணவக்கொலையை தடுக்க சட்டம் கொண்டுவர முதல்வரிடம் பேச சட்டத்துறை அமைச்சராக உங்களுக்கு பாசிபிலிட்டி இருக்குதா?

துரைமுருகன் பதில்: என்ன செய்வது என்று நான் அவருடன் பேசுவேன். அதற்கு முன்னாள் நான் உங்களுடன் பேசமாட்டேன். சில விஷயங்கள் சட்டசபைக்கு வர வேண்டியது. அதனை இப்பொழுது பேச முடியாது.

இவ்வாறு துரைமுருகன் கூறினார். சமீபத்தில், 'அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்' என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement