அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்தினால்...: தேர்தல் கமிஷனுக்கு ராகுல் எச்சரிக்கை

33


பெங்களூரு: '' அரசியலமைப்பு மீது தேர்தல் கமிஷன் தாக்குதல் நடத்தினால், அதற்கு நீங்கள் எதிர்க்கட்சிகளை சந்திக்க நேரிடும். கடந்த 10 ஆண்டு கால வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை எங்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார்.

வாக்காளர் பட்டியல்



தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: அரசியலமைப்புக்கு எதிரானதாக பா.ஜ., உள்ளது. ஆனால் அதனை பாதுகாக்க ஒவ்வொரு காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் போராடுவார்கள். கடந்த 10 ஆண்டு கால வாக்காளர் பட்டியல் மற்றும் வீடியோ பதிவுகளை உடனடியாக தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்க வேண்டும்.

ஆச்சர்யம்



லோக்சபா தேர்தல் நடந்த சில மாதங்களில் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடந்தது. லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், நான்கு மாதங்களுக்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுகிறது. இது ஆச்சர்யமாக உள்ளது. விசாரணையின் போது தான், ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போட்டனர் என தெரியவந்தது. அவர்கள் ஓட்டுப்போட்ட இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.எங்கள் ஓட்டுகள் குறையவில்லை. ஆனால், புதிய வாக்காளர்களின் ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. அது முதல், ஏதோ தவறு நடந்தது தெரியவந்தது.

முடியாது



தேர்தல் கமிஷன் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகால வாக்காளர் பட்டியல் மற்றும் வீடியோ பதிவுகளை நீங்கள் தராமல் மறைக்க முடியாது. அரசியலமைப்பை தாக்குவதற்கு முன்னர் நீங்கள் இரு முறை யோசிக்க வேண்டும். நாங்கள் உங்களை கண்டுபிடிப்போம். அதற்கு நேரம் எடுக்கலாம். ஆனால், அதனை நாங்கள் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

தோல்வி



காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாவது: போலி ஓட்டுகளால் 2019 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தோம். போலி ஓட்டுகள் மூலம் நாட்டை மோடி அழ வைத்துவிட்டார். 2019 ல் இதனை நான் கூறியுள்ளேன். எனது அரசியல் வாழ்க்கையில் 2019 தேர்தலில் நான் தோல்வியடைந்தேன். போலி ஓட்டுகளால் நான் தோல்வியடைந்தேன். தற்போது இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. இந்த அரசு நீடித்து இருக்காது. மக்கள் மூலம் உங்களை வீழ்த்துவோம். அதோடு அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும். மோசமான பொருளாதார கொள்கைகள் மூலம் நாட்டை வழிநடத்துகின்றனர்.

செய் அல்லது செத்துமடி



வரும் திங்கட்கிழமை அனைத்து எம்.பி.,க்களும் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்கிறோம். இண்டி கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார். அரசியலமைப்பை பாதுகாக்க செய் அல்லது செத்து மடிய வேண்டும். ராகுலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்களிடம் விழிப்புணர்வு வர அவர் பணியாற்றி வருகிறார். 50 வழக்குகள் இருந்த போதும் அவர் எதற்கும் தயாராக இருக்கிறார். இவ்வாறு கார்கே பேசினார்.

Advertisement