இந்திய பவுலர்களுக்கு புதிய சோதனை * பி.சி.சி.ஐ., அறிமுகம்

புதுடில்லி: இந்திய பவுலர்களின் உடற்தகுதியை சீராக பராமரிக்க, பி.சி.சி.ஐ., புதியதாக 'பிரான்கோ' சோதனை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது சிராஜ் மட்டும் ஐந்து போட்டியில் பங்கேற்றார். மற்றவர்கள் முழுமையான உடற்தகுதியில் இல்லை. பும்ரா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா தலா 3 டெஸ்டில் மட்டும் விளையாடினர்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), சம்பள ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள், பவுலர்கள் சிறப்பான உடற்தகுதியை பராமரிக்கும் வகையில், 'பிரான்கோ' சோதனை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே 'யோ யோ' டெஸ்ட் உள்ள போதும், இந்திய அணியின் 'ஸ்ட்ரென்த் அண்டு கண்டிசனிங்' பயிற்சியாளர் அட்ரியன் லே ரவுச், பயிற்சியாளர் காம்பிர் சம்மதத்துடன் இதை பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து வெளியான செய்தி:
இந்திய அணியின் பெரும்பாலான பவுலர்கள், ஓட்டப் பயிற்சியில் கவனம் செலுத்தாமல், ஜிம்மில் அதிக நேரம் செலவிடுகின்றனர்.
இதை தவிர்த்து பவுலர்கள் எப்போதும் உடற் தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய, 'பிரான்கோ' சோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்த பட்டியலில் உள்ள பல வீரர்கள், ஏற்கனவே பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று, இந்த சோதனையில் பங்கேற்றனர். இது வீரர்கள் எப்போதும் 'பிட்னசுடன்' இருப்பதை உறுதி செய்கிறது. இந்திய வீரர்கள், குறிப்பாக பவுலர்களுக்கு இது மிகவும் கைகொடுக்கும். தவிர, வீரர்கள் ஓட்டப்பயிற்சியில் அதிகமாக ஈடுபடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பிரான்கோ' எப்படி
'பிரான்கோ' சோதனையின் படி, வீரர்கள் முதலில் 20 மீ., ஓடி, திரும்பி வந்து, அடுத்து 40 மீ., ஓடி திரும்ப வேண்டும். மறுபடியும் 60 மீ., ஓடிவிட்டு, திரும்ப வேண்டும். தொடர்ந்து இதுபோல ஓய்வெடுக்காமல் 5 முறை (மொத்தம் 1200 மீ.,) ஓடி முடிக்க வேண்டும். இந்திய வீரர்கள் 6 நிமிடத்தில் இந்த சோதனையை முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தவிர, 2 கி.மீ., துாரத்தை வேகப்பந்து வீச்சாளகர் 8 நிமிடம், 15 வினாடியில் ஓடி முடிக்க வேண்டும். பேட்டர்கள், விக்கெட் கீப்பர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் 8 நிமிடம், 30 வினாடியில் கடக்க வேண்டும்.

Advertisement