தடுப்பூசி போட்ட போது மயக்கம் 2 மாணவியருக்கு சிகிச்சை

செய்யூர்:கடப்பாக்கத்தில், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் தடுப்பூசி செலுத்திக் கொண்ட, அரசு பள்ளி மாணவியர் இருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே கடப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 500க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.

மாணவியருக்கு நேற்று, கடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினரால், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது.

150 மாணவியருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவியர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, பள்ளியில் மயங்கி விழுந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்டு, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு, மாணவியரின் உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, சூணாம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement