இந்திய அணிக்கு அனுமதி * ஆசிய கோப்பையில் பங்கேற்க...

புதுடில்லி: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் பங்கேற்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது.
சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவின் புதிய விளையாட்டு கொள்கையை நேற்று மத்திய அரசு வெளியிட்டது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதன் விபரம்:
இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இனிமேல் எவ்வித விளையாட்டிலும் இரு தரப்பு கொண்ட மோதலில் ஈடுபடாது. இதன் படி இந்திய அணி பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்காது. இந்திய மண்ணில் பாகிஸ்தான் விளையாட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதேநேரம், ஒலிம்பிக் விதிகளை இந்தியா பின்பற்றுகிறது என்பதால், பல்வேறு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட, பாகிஸ்தான் வீரர், வீராங்கனைகள் இந்தியா வருவதை நாங்கள் தடுக்க மாட்டோம். தவிர, ஆசிய கோப்பை போன்ற பல்வேறு அணிகள் பங்கேற்கும் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் விளையாடுவதையும் தடுக்க மாட்டோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்., உடன் மோதல்
இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ள, ஆசிய கோப்பை 'டி-20' கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்பது உறுதியானது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் எமிரேட்சை (செப். 10) சந்திக்கிறது.
அடுத்து செப்டம்பர் 14ல் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பின் 'சூப்பர்-4' சுற்று, பைனலுக்கு முன்னேறினால் என, ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோத வாய்ப்பு உள்ளது.
தவிர, இந்தியாவில் நடக்கவுள்ள பெண்கள் உலக கோப்பை (50 ஓவர், செப். 30-நவ. 2) தொடரில், பாகிஸ்தான் அணி பங்கேற்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement