தமிழகத்தின் விஷால் தேசிய சாதனை * 'சீனியர்' தடகள சாம்பியன்ஷிப்பில்...

சென்னை: தேசிய 'சீனியர்' தடகளம் 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் விஷால், புதிய சாதனை படைத்தார்.
சென்னையில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64 வது சீசன் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான 400மீ., ஓட்டம் பைனல் நடந்தது. தமிழகத்தின் விஷால் தென்னரசு, 45.12 வினாடி நேரத்தில் கடந்து, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதற்கு முன் 2019ல் முகமது அனாஸ், 45.21 வினாடியில் கடந்து இருந்தார்.
தமிழகத்தின் மற்றொரு வீரர் ராஜேஷ் ரமேஷ் (46.04), ஹரியானாவின் விக்ராந்த் (46.17), வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
நான்காவது 'பெஸ்ட்'
இதையடுத்து, ஆசிய அளவில் 400 மீ., ஓட்டத்தில் இந்த சீசனின் நான்காவது சிறந்த வீரர் ஆனார் விஷால் (45.12). முதல் மூன்று இடத்தில் யூகி நகஜிமா (44.84, ஜப்பான்), அம்மர் இஸ்மாயில் (44.90, கத்தார்), லியுகய் (45.06, சீனா) உள்ளனர்.
பரனிகா அபாரம்
பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் பரனிகா 4.10 மீ., உயரம் தாவி, தங்கம் கைப்பற்றினார். மரியா (4.05, கேரளா), சத்யா (4.00, தமிழகம்) வெள்ளி, வெண்கலம் வென்றனர். பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் ஹரியானாவின் பூஜா (4 நிமிடம், 10.68 வினாடி) தங்கம் வென்றார்.
ஸ்டாலின் கலக்கல்
ஆண்களுக்கான 'டெகாத்லான்' போட்டி நடந்தது. 100, 1500 மீ., ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உட்பட மொத்தம் 10 பிரிவில் வீரர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் ஸ்டாலின் ஜோயஸ், மொத்தம் 7052 புள்ளி பெற்று, முதலிடம் பிடித்து தங்கம் வசப்படுத்தினார். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் குஜராத்தின் தேவியனிபா (53.37 வினாடி) தங்கம் வென்றார்.
12 பதக்கம்
முதல் இரு நாளில் தமிழகம் 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை கைப்பற்றியது.

Advertisement