உலக விளையாட்டு செய்திகள்

ஜப்பான் கலக்கல்
பாங்காக்: தாய்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் ஜப்பான் அணி 3-1 என, செர்பியாவை வீழ்த்தியது. ஏற்கனவே கேமரூன், உக்ரைனை வீழ்த்திய ஜப்பான், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது. 'ரவுண்டு-16' போட்டியில் (ஆக. 29) ஜப்பான், தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.


பைனலில் தென் கொரியா
தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஜூனியர் பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தென் கொரிய அணி 31-17 என, சீனதைபேயை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் அணி 26-19 என, சீனாவை வென்றது. பைனலில் (ஆக. 29), ஜப்பான், தென் கொரியா மோதுகின்றன.


காலிறுதியில் இத்தாலி
ஜியாங்மென்: சீனாவில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் (21 வயது) 'ரவுண்டு--16' போட்டியில் இத்தாலி அணி 3-0 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஜப்பான் அணி 2-3 என, சீனாவிடம் தோல்வியடைந்தது. போலந்து அணி 3-1 என, உக்ரைனை வென்றது.


மான்செஸ்டர் அதிர்ச்சி
லண்டன்: இங்கிலீஷ் லீக் கோப்பை கால்பந்து 2வது சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட், கிரிம்ஸ்பி டவுன் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது. 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஏமாற்றிய மான்செஸ்டர் யுனைடெட் அணி 11-12 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.



எக்ஸ்டிராஸ்

* பெங்களூருவில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் காலிறுதியில் வடகிழக்கு, மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன. டேனிஷ் மலேவர் (198*), கேப்டன் ரஜத் படிதர் (125) கைகொடுக்க முதல் நாள் முடிவில் மத்திய மண்டல அணி 432/2 ரன் எடுத்திருந்தது. கிழக்கு மண்டல அணிக்கு எதிரான மற்றொரு காலிறுதியில் வடக்கு மண்டல அணி 308/6 ரன் எடுத்திருந்தது.


* சீனாவில் நடக்கும் 'பெல்ட் அண்டு ரோடு' சர்வதேச யூத் குத்துச்சண்டை 3வது சீசனின் அரையிறுதிக்கு முன்னேறிய 26 இந்திய நட்சத்திரங்கள் பதக்கத்தை உறுதி செய்தனர்.

Advertisement