'என்.சி.இ.ஆர்.டி.,யை ஆர்.எஸ்.எஸ்., இயக்குவதாக கூறுவது முட்டாள்தனம்'

6

புதுடில்லி: ''என்.சி.இ.ஆர்.டி.,யை ஆர்.எஸ்.எஸ்., இயக்குகிறது எனக் கூறுவது முட்டாள்தனம். பாடத் திட்டங்களை திருத்தும்படி எங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை,'' என, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் சமூக அறிவி யல் பாடப்புத்தகத்துக்கான தலைவர் பேராசிரியர் மைக்கேல் டானினோ தெரிவித்தார்.

நாடு முழுதும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப்புத்தகங்களை பயன்படுத்துகின்றன. இதில், அவ்வப்போது சில திருத் தங்கள், என்.சி.இ.ஆர்.டி., யால் மேற்கொள்ளப்படுகின்றன.

திருத்தம் அந்த வகையில், பிளஸ் 2 வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான சில பகுதிகள் நீக்கப்பட்டன. அதே போல், 7 மற்றும் 8ம் வகுப்பு புத்தகத்திலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து வேண்டுமென்றே முஸ்லிம் மன்னர்களின் குறிப்புகள் நீக்கப்படுகின்றன' என, குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி.,யின் சமூக அறிவியல் பாடப்புத்தகத்துக்கான தலைவர் பேராசிரியர் மைக்கேல் டானினோ நேற்று அளித்த பேட்டி:

என்.சி.இ.ஆர்.டி., அமைப்பை ஆர்.எஸ்.எஸ்., இயக்குகிறது எனக் கூறுவது முட்டாள்தனம். பாடத்திட்டத்தை திருத்தும்படி, மத்திய அரசோ, பா.ஜ.,வோ அல்லது வேறெந்த அரசியல் கட்சி களோ எங்களை கட்டாயப் படுத்தவில்லை.

பாடப்புத்தகங்களில் தங்களது மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த குறிப்புகள் இடம் பெற வேண்டும் என, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன.

அவற்றை எங்களால் நிறைவேற்ற முடியாது. மாணவர்களுக்கு எது மிகவும் முக்கியமோ, அதை மட்டுமே செய்ய முடியும்.

திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களில், முடிந்தவரை வரலாற்றை நேர்மையாக காட்ட முயற்சித்துள்ளோம். அதை மிகைப்படுத்தியும் கூறவில்லை. என்ன நடந்ததோ அதை அப்படியே கூறியிருக்கிறோம்.

பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்களின் குறிப்புகள் நீக்கப்படவே இல்லை. அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

வரலாறு சுதந்திர போராட்ட வீரர்களை உள்ளடக்கிய கருப்பொருளின் ஒரு பகுதியாக, முகலாயர்களைக் காட்டியுள்ளோம். ஏனெனில், இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக முகலாயர்களை பிரிட்டிஷார் தோற்கடித்தனர் என, பலர் நம்பினர்; ஆனால், அது அப்படி இல்லை.

பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு, பல இந்திய ஆட்சியாளர்கள் முகலாயர்களை எதிர்த்தனர் என்பது தான் வரலாறு. சமூக அறிவியல் பாடப்புத்தகங்களின் இரண்டாம் பகுதி, வரும் அக்டோபர் மாதத்திற்குள் தயாராகிவிடும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Advertisement