ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீஹாரின் ராஜ்கிர் நகரில், ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறும். இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள், வரும் செப். 7ல் நடக்கவுள்ள பைனலில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, அடுத்த ஆண்டு பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பைக்கு (ஆக. 14-30) நேரடியாக தகுதி பெறும்.

இந்திய அணி 'ஏ' பிரிவில் சீனா (ஆக. 29), ஜப்பான் (ஆக. 31), கஜகஸ்தான் (செப். 1) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. 'பி' பிரிவில் வங்கதேசம், சீனதைபே, மலேசியா, தென் கொரியா அணிகள் உள்ளன.

இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், விவேக் சாகர் பிரசாத், ஹர்திக் சிங், ராஜ் குமார் பால், மன்தீப் சிங், தில்பிரீத் சிங் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் உள்ளனர். ஆசிய விளையாட்டு (2023), ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் (2024), இந்திய அணி விளையாடிய 14 போட்டியில், 94 கோல் பதிவானது. சொந்த மண்ணில் களமிறங்கும் இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



@quote@

இதுவரை சாம்பியன்



ஆசிய கோப்பை ஹாக்கி வரலாற்றில் தென் கொரிய அணி அதிகபட்சமாக 5 முறை (1994, 1999, 2009, 2013, 2022) சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 3 முறை (2003, 2007, 2017) கோப்பை வென்றிருந்தது. இதில் 2007ல் சொந்த மண்ணில் (சென்னை) சாதித்தது.quote

Advertisement