ஜாதி, மதம், மதுவுக்கு இணையானது சினிமா போதை: சீமான்

6


திருவள்ளூர்: ''ஜாதி, மதம், மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்த கூட்டம் இருக்கிறது. இந்த மூன்றுக்கும் இணையான போதை திரைப்போதை. அதுக்கு எதிராக ஒருவரும் பேசுவதில்லை,'' என்று மரங்களின் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அவர் பேசியதாவது; இந்தக் காட்டுக்குள் புலிகள் நுழைந்தவுடனே, ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கு சேர்த்து தான் காடு வளர்க்க நாம் பாடுபடுகிறோம். மரங்களுக்கு என்ன மாநாடு? இவர்களுக்கு என்ன மரை கழன்று விட்டதா? என்று கேட்பார்கள். மரை கழன்றதால் அல்ல, மறை கற்றதால் இந்த மாநாடு.

திராவிடம் தந்த துயர்

நாட்டுக்காக நிற்பவர்களால் தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டுக்காக நிற்பவர்களால் இந்த மாநாட்டை நடத்த முடியாது. வாக்குக்காக நிற்பவர்கள் இதை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். மக்களின் வாழ்க்கைக்காக நிற்பவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்துவார்கள், நடத்த முடியும்.

'காடும் காடு சார்ந்த இடம் முல்லை. அது தமிழன் வைத்த பெயர். காடும் காடு சார்ந்த இடம் கொல்லை. இது திராவிடம் தந்த துயர்,' என்று கவி பாஸ்கர் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அப்துல்கலாம் சொன்ன ஒரே காரணத்திற்காக நடிகர் விவேக், ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்யத் தொடங்கினார். 36 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்த நிலையில், அவர் காலமானார். காடுகளை அழித்து விட்டு விரைந்து செல்ல ரோடுகளைப் போட்ட ஆட்சியாளர்கள், பட்ஜெட்டில் தூய காற்றுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கினார்கள். காற்றைத் தருவது மரங்கள் தான். யாரும் எழுதிக் கொடுத்து நான் பேசவில்லை. நானாகத் தான் பேசுகிறேன். இப்போது வாயை வாடகைக்கு விடுபவர்கள் அதிகமாக வந்து விட்டார்கள்.

தண்ணீர் மாநாடு

நம்முடைய அரசு 'மரம் நடுவோம்... மழை பெறுவோம்' என்று எழுதி கொடுப்பதோடு பொறுப்பு முடிந்து விட்டது. ஒவ்வொரு தலைவனின் பிறந்த நாளில் ஒரு கோடி மரம் நடுவோம். இது எல்லாம் பேப்பரோடு முடிந்து விடும். மக்களுக்கான அரசியல் செய்ய நினைப்பவன் தான் இதனை செயலாக்குவான். அப்படித்தான், மாடு,ஆடுகளின் மாநாடு, மரங்களின் மாநாடு, மலைகளின் மாநாடு, தண்ணீர் மாநாடு நடக்கப்போகிறது.

6 மாத சிறை தண்டனை

ஆட்சிக்கு வந்தால், 10 ஆண்டு பசுமை திட்டம், பல கோடி பனைத் திட்டம். மக்கள் இயக்கம் போல மாற்றி மரம் வளர்ப்பை கொண்டு வருவேன். ஒரு குழந்தை பூமியில் பிறந்தால், அதற்கு பெயர் வைப்பதற்கு முன்பு, ஒரு மரத்தை நட்டு, அந்தக் குழந்தையின் பெயரை மரத்திற்கும் வைப்போம். மக்கள் அனைவரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு மரம் வைக்கச் சொல்வேன். மரத்தை வெட்டினால் 6 மாத சிறை தண்டனை.

எந்த வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலும் வைப்புத்தொகையாக ரூ.5,000 போடுவேன். அவள் படித்து மண வயதை எட்டிய போது, ரூ.10 லட்சத்தை கையில் கொடுப்பேன். படிக்கும் போது, பிள்ளைகளிடம் மரம் வளர்த்தலை மக்கள் இயக்கமாக மாற்றுவேன். ஒரு பையன் 10 மரங்களை நட்டு வளர்த்தால், தேர்வில் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். 100 மரங்களை நட்டு வளர்த்தால், சிறந்த தமிழ் தேசிய குடிமகன் விருது வழங்கப்படும். அந்த சான்றிதழை அவன் வைத்துக் கொண்டால், வேலைவாய்ப்பில் முன்னுரிமை. 1000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்தால், அவன் சாகும் போது அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.

மரங்கள் நடவு செய்யும் எண்ணிக்கையை பொறுத்து மக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். சொந்த இடத்தில் இருக்கும் மரத்தை வெட்டுவதாக இருந்தாலும் அனுமதி பெற வேண்டும்.

நடிகன் நாடாளத் துடிக்கிறான்

நல்லகண்ணு பிறந்து வாழ்ந்த மண்ணில் தான் நடிகன் நாடாளத் துடிக்கிறான். நீ பின்னாடி போய் நிற்கிறாய். கலையை போற்று, கொண்டாடு. அதை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க வேண்டும். ஜாதி, மதம், மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்த கூட்டம் இருக்கிறது. இந்த மூன்றுக்கும் இணையான போதை திரைப்போதை. அதுக்கு எதிராக ஒருத்தனும் பேச மாட்டிங்கிறான். மரம் என்பது நாம் தமிழர் கட்சிக்காரனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.
நடித்தால் நோட்டைத் தருவோம், வாழ்வதற்கு... நடிப்பதை நிறுத்தினால் நாட்டைத் தருவோம், நீ ஆள்வதற்கு... என்பதை நீ ஏற்கிறாயா?, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement