மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்தில்லை என நிரூபித்தால் விமான டிக்கெட் அமைச்சர் சுப்பிரமணியன் சவால்

24

சென்னை: ''அரசு மருத்துவமனை களில் நாய்க்கடி, பாம்புக்க டிக்கு மருந்து இல்லை என யாராவது நிரூபித்தால், எந்த ஊருக்கு வேண்டு மானாலும் செல்ல விமான டிக்கெட் வாங்கி தருகிறேன்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சவால் விடுத்தார்.

சென்னை மாநகராட்சி மணலியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில், 2 லட்சம் பேர் இதுவரை பயன் அடைந்துள்ளனர். முகாமில், குழந்தை நலம், மூக்கு - தொண்டை - காது உள்ளிட்ட, 17 வகையான சிகிச்சைகளுக்கான மருத்துவம் அளிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறன் அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

பருவமழை முன்னெச்சரிக்கையாக, சென்னை மாநகராட்சியில், 3,081 கி.மீ., துாரத்திற்கான மழை நீர் வடிகால் துார்வாரும் பணி நடக்கிறது.

மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், பருவமழை காலங்களில், ஒரே நாளில், 2,000 முகாம்கள் நடத்தப்பட்டு, மக்கள் பயனடைந்துள்ளனர். அதேபோல, இந்த முறையும், தேவை இருக்கும் இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

அரசு மருத்துவமனைகளில், நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்தில்லை என, தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால், எந்த அரசு மருத்துவமனையிலும் மருந்தில்லை என்று கூறுவதில்லை. பொதுவாக மருந்தில்லை என்கின்றனர். எந்த மருத்துவமனையில் மருந்தில்லை என்று கூறுங்கள்.

கோவை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், ஏதேனும் ஒரு கிராமத்தில் மருந்தில்லை என்றாலும், நானே விமான டிக்கெட் மற்றும் பஸ் டிக்கெட் போட்டு தருகிறேன். எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நிரூபிப்பவர்கள் செல்லலாம்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களிலும், நாய் மற்றும் பாம்புக்கடிக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement