ரூ.25 லட்சம் ரொக்கத்துடன் பயணி ரயில் பயணம்: பறிமுதல் செய்தது ரயில்வே பாதுகாப்பு படை

1

பல்லியா: உத்திரபிரதேசத்தில் ரயிலில் ரூ.25 லட்சம் ரொக்கத்தை எடுத்துச்சென்ற பயணியிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் கோஹியா சாப்ரா கிராமத்தை சேர்ந்த அக்ஷய் குமார் சோனி, நேற்று மாலை பீஹாரின் சாப்ராவுக்கு உட்சர்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். இந்த ரயில் உத்தரபிரதேசம் மாநிலம் பல்லியாவில் உள்ள சுரைமான்பூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது சந்தேகம் அடைந்த அக்ஷய் குமார் சோனியிடம், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் எடுத்துச்சென்ற அந்த தொகை குறித்து திருப்திகரமான விளக்கம் அளிக்க முடியவில்லை. இந்நிலையில் ரூ.25 லட்சத்தை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

பல்லியா-சாப்ரா ரயில் பிரிவில் இது மூன்றாவது பெரிய ரொக்கப் பறிமுதல் ஆகும்.
பறிமுதல் குறித்து வருமான வரித் துறைக்கு அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து வருமான வரிச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் சோனிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி, பல்லியா ரயில் நிலையத்தில், சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸ் பயணி முகமது முஸ்தபாவிடமிருந்து ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) ரூ.53.96 லட்சத்தை மீட்டது. ஜூலை 22 ஆம் தேதி, சபர்மதி-தர்பங்கா எக்ஸ்பிரஸ் பயணி ஒருவரிடமிருந்து ரூ.1.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement