இந்தியா-ஆப்கானிஸ்தான் 'டிரா' * நேஷன்ஸ் கால்பந்து தொடரில்...

ஹிசோர்: மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் நடக்கிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் தஜிகிஸ்தானை வென்றது. அடுத்து, ஈரானிடம் தோற்றது.
நேற்று தனது கடைசி லீக் போட்டியில் 133 வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஆப்கானிஸ்தானை (161) எதிர்கொண்டது. இந்திய வீரர்கள் பெரும்பாலும் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
கோல் இல்லை
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டின. 56 வது நிமிடம் இந்தியாவின் ஜித்தின் கோல் அடிக்க முயற்சிக்க, ஆப்கானிஸ்தான் கோல் கீப்பர் பைசல் ஹம்தி தடுத்து வெளியே தள்ளினார்.
கடைசி 10 நிமிடத்தில் உடாண்டா சிங், சாங்டே, தானிஷ் பட் என மூன்று மாற்று வீரர்களை களமிறக்கினார் இந்திய அணி பயிற்சியாளர் காலித். இருப்பினும் கடைசி வரை கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி (0-0) 'டிரா' ஆனது. 'பி' பிரிவில் இந்திய அணி 4 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்றது. 6 புள்ளியுடன் முதலிடம் பிடித்த ஈரான், பைனலுக்கு முன்னேறியது.

Advertisement