பைனலில் சபலென்கா-அனிசிமோவா: யு.எஸ்., ஓபனில் மோதல்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலுக்கு பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அனிசிமோவா முன்னேறினர்.

நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 4வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய சபலென்கா 6-4 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 4-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் தொடர்ந்து 3வது முறையாக (2023-25) பைனலுக்கு முன்னேறினார். கடந்த 2023ல் நடந்த பைனலில் அமெரிக்காவின் கோகோ காப்பிடம் தோல்வியடைந்த சபலென்கா, கடந்த ஆண்டு ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி கோப்பை வென்றார். தவிர இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 7வது முறையாக பைனலுக்குள் நுழைந்தார். இதுவரை 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
அனிசிமோவா அசத்தல்: மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா மோதினர். இதில் அனிசிமோவா 6-7, 7-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார். தவிர இவர், 2வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார். கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் பைனலில், போலந்தின் ஸ்வியாடெக்கிடம் தோல்வியடைந்தார்.



@quote@

பாம்ப்ரி ஜோடி ஏமாற்றம்



ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 7-6, 6-7, 4-6 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி, நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது. கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறிய 4வது இந்திய வீரர் என்ற பெருமையுடன் பாம்ப்ரி வெளியேறினார். ஏற்கனவே பயஸ், பூபதி, போபண்ணா அரையிறுதிக்கு முன்னேறி இருந்தனர். quote

Advertisement