நிலங்களில் மின் ஒயர் திருட்டு விவசாயிகள் அச்சம்

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த வலசக்காடு கிராம வயல்களில் மின்மோட்டார்களில் மர்ம நபர்கள் ஒயர்களை திருடிச் செல்வதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வலசக்காடு கிராமத்தில் விவசாயிகள் தங்களது வயல்களில் மின்மோட்டார் போர்வெல் பாசனம் மூலம் நெல் நடவு செய்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறுவடை பணிகள் முடிந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவிந்தசாமி, ராமசாமி, செல்வி, பன்னீர்செல்வம், ராமையன், ஆதிமூலம் ஆகியோரின் வயல்களில் மின்மோட்டாரின் ஒயர்களை மர்ம நபர்களை திருடிச் சென்றனர். இதனால், விவசாயிகள் சம்பா பருவத்திற்கான நாற்றங்கால் விடும் பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் ஒயர் திருட்டு சம்பவத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement