சேதமடைந்த தரைப்பாலம் தேவதானத்தில் கடும் அவதி

பொன்னேரி:தேவதானத்தில் ஏரியின் கலங்கல் பகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த பி.என்.கண்டிகை, வெள்ளகுளம், தேவதானம், காணியம்பாக்கம் ஆகிய கிராமங்கள் வழியாக திருவெள்ளவாயல் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.

இச்சாலையில் உள்ள தேவதானம் கிராமத்தில், ஏரியின் கலங்கல் பகுதியில் தரைப்பாலம் சேதமடைந்து உள்ளது. கான்கிரீட் சேதமடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஜல்லிக்கற்களும் பெயர்ந்து கரடு, முரடாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.

மழைக்காலங்களில் ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறும்போது, 1 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. அச்சமயங்களில் வாகனங்களில் செல்வோர், சேதமான தரைப்பாலத்தின் பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றனர்.

மேலும், தேவதானத்தில் பிரசித்தி பெற்ற வடஸ்ரீரங்கம் எனப்படும் ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர்.

இப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement