சென்னை டிஜிபி அலுவலக வாசலில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்!

2

சென்னை: சென்னையில் டிஜிபி அலுவலக வாயிலில் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர்.



பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்க சிலர் வந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புரட்சி தமிழகம் கட்சியை நடத்தி வரும் ஏர்போர்ட் மூர்த்தி அங்கு வந்திருந்தார்.


டிஜிபி அலுவலக நுழைவு வாயிலில் 4 பேர் கொண்ட கும்பல் எதிர்பாராத விதமாக ஏர்போர்ட் மூர்த்தியை சரமாரியாக தாக்கி உள்ளது. அடுத்த சில நிமிடங்களில் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து ஏர்போர்ட் மூர்த்தி அவதூறாக சில கருத்துகள் தெரிவித்ததாகவும், அதனால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


ஏர்போர்ட் மூர்த்தியின் மீதான தாக்குதலை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

Advertisement