அதிமுக ஆட்சியில் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் மீட்கப்படுவார்கள்: இபிஎஸ் உறுதி

நத்தம்: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் மீட்கப்படுவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பேசினார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் இபிஎஸ், இன்று நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார்.
நத்தம், கொட்டாம்பட்டி ரோடு ரவுண்டானாவில் இபிஎஸ் பேசியதாவது:
''நத்தம் பேரூராட்சியில் எழுச்சி பயண நிகழ்ச்சியை நடத்தும்போது வருணபகவான் மழை கொடுத்தார். நமது வெற்றிக்கு இறைவனே சாட்சி. இப்பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளிகள் நிறைந்த பகுதி. விவசாயத்தை நம்பி வாழ்கின்ற மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொடுத்தோம்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன.
விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24மணிநேரம் கொடுத்தோம். புயல், வெள்ளம்,வறட்சி உள்ளிட்ட பேரிடரின்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். இந்தியாவிலேயே அதிகப்படியான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுத்தது அதிமுக அரசுதான். அதுமட்டுமின்றி, வறட்சி ஏற்பட்ட காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசுதான். இப்படி கண்ணை இமை காப்பது போல காப்பாற்றினோம்.
விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவித் திட்டம் கொடுத்தோம்.
கொடிய நோயை வென்று மக்களைக் காத்தோம். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம்.
ஏழை, விவசாயத் தொழிலாளிகள், தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். நல்ல தரமான பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும்.
மகளிருக்கு உரிமைத் தொகை கொடுத்ததாக ஸ்டாலின் பேசுகிறார். தேர்தல் நெருங்குவதால் இப்போது விதியைத் தளர்த்திக் கொடுப்பார்களாம். முன்பே கொடுத்திருந்தால் இதுவரை 53 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கும், இனி 7 மாதங்களில் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
தமிழகத்தில் 6000 மதுக்கடை உள்ளது, 2500 பார்களை திமுகவினரே எடுத்துக்கொண்டனர். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். முழுமையாக விசாரித்ததில் 40 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தி வந்திருக்கிறது.
கிராமப்புறங்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். வெறும் 9 பேருக்குத்தான் மருத்துவக் கல்வி கிடைத்தது. அத்தகைய ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம்.
ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தோம், திமுக அரசினால் ஒரு கல்லூரி கூட கொண்டுவரமுடியவில்லை. சாணார்பட்டி ஒன்றியத்தில் தடுப்பணை கட்டினோம், 20க்கும் மேற்பட்ட ஊராட்சியில் ஒரு கோடியில் அம்மா மண்டபம் அமைத்தோம், தார்சாலைகள் அமைத்தோம், சிறுமலை ஊராட்சியில் 5 கோடியில் பல்லுயிர் பூங்கா, கோபால்பட்டியில் குளிர்பதன ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்தோம். தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டது. குளங்கள் தூர்வாரப்பட்டது.
கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் வசதி செய்துகொடுத்தோம், கால்நடை மருத்துவமனை கொடுத்தோம்.
நத்தம் தொகுதியில் மா விளைச்சல் அதிகம் நடக்கிறது, இந்தாண்டு மா விளைச்சல் அதிகமாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதிமுக ஆட்சி அமைந்ததும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் மீட்டெடுக்கப்படுவார்கள், நிவாரணமும் கொடுக்கப்படும்.
புளி விளைச்சலும் அதிகமாக உள்ளது. நான் வரும்போதுகூட விவசாயிகள் என்னை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்” என்று உற்சாகமாகப் பேசினார்.
முன்னதாக, எழுச்சிப்பயணத்திற்காக திண்டுக்கல் வந்திருந்த இபிஎஸ்,அங்குள்ள தனியார் விடுதியில்,திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அவர்களது கோரிக்கைகளை கேட்ட பின், இபிஎஸ் பேசியதாவது :
கோரிக்கைகளை மனுக்களாக கொடுங்கள். எதிர்காலத்தில் எந்த அளவுக்கு முடியுமோ அதை செய்து தருகிறோம். விவசாயிகள் நினைத்து பார்க்க முடியாத சலுகைகள் மற்றும் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது.
குடிமராமத்து மூலம் தமிழகத்தில் பல இடங்களில் ஏரி குளங்கள் தூர்வரப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன்,எஞ்சிய ஏரி குளங்கள் தூர் வரப்படும்.திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் வைத்த கோரிக்கையான மஞ்சள் ஆறு தூர்வாரப்படும். வன்னிய கிறிஸ்வதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில்
சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை, அரசு அமைந்தவுடன் பரீசிலிக்கப்படும்.
தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் வைத்த மின்சாரம் மற்றும் வரி உயர்வு பிரச்சனைகள் குறித்து மத்திய அரசுடன் பேசி தீர்வு காணப்படும். அதிமுக ஆட்சியில் ரவுடிகள் கலாச்சாரம் ஓடுக்கப்பட்டது. பல ரவுடிகள் வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடினர். போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதால், ரவுடிகள் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, பணம் தராமல் தாக்குதல் நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடி ராஜ்ஜியம் ஒடுக்கப்படும்
இவ்வாறு இபிஎஸ் உறுதி அளித்தார்.









