தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும்; இண்டி கூட்டணி பேச்சுவார்த்தையில் போடப்பட்ட கண்டிசன்!

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான இடஒதுக்கீடு குறித்த இண்டி கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது. இந்த முறை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சக்தி கட்சிகள் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
பீஹார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், ஆர்ஜேடி காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இல்லத்தில் இண்டி கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள், விகாஷூல் இன்சான் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், பீஹார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சக்தி கட்சிகள் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது; இட ஒதுக்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்தது. கூட்டணி கட்சிகள் பரந்த ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளன. கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தங்கள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிற்க வைக்கும்.
இந்த முறை இரண்டு அல்லது மூன்று புதிய கட்சிகள் இண்டி கூட்டணியில் இணைவதால், கூட்டணியின் கட்சிகள் 2020 தேர்தல்களில் போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கையில் சமரசம் செய்ய வேண்டியிருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.