28 ஆண்டுகளாக கல்வி சேவையில் 'ரியல் லைப் ஹீரோ'

பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் வேலை செய்வதற்கு ஆசிரியர்கள் யாரும் முன்வருவதில்லை. இதற்கு காரணம், அங்கு நிலவும் ஜாதிய ரீதியான மோதல்கள், முற்றிலும் வளர்ச்சி அடையாத கிராமங்களே. இந்த பள்ளிகளில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தாலும், ஆசிரியர்கள் தயங்குகின்றனர்.

அப்படி இருக்கையில் அடர்ந்த வனப்பகுதிக்குள், படிப்பறிவில்லாத கிராமத்தில் கடந்த 28 ஆண்டுகளாக ஒருவர் ஆசிரியராக இருக்கிறார் என்றால், அவர் தானே நிஜ ஹீரோ. அப்படிப்பட்ட ரியல் லைப் ஹீரோவை பற்றி பார்ப்போமா.

பெலகாவியில் உள்ள கானாபூர் தாலுகாவில் உள்ள பீமகர் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அமகம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் நிங்கப்பா பாலேகுந்த்ரிகி, 55. இவர், வெறும் 565 பேர் உள்ள சிறிய கிராமமான அகமம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இந்த கிராமத்தில் நெட் ஒர்க் வசதி கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிக்கும் குரல் அப்படிப்பட்ட ஊரில் உள்ள பள்ளியில், கடந்த 28 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர், பள்ளியில் தலைமை ஆசிரியராக மட்டும் இருப்பதில்லை.

மாறாக, கிராமத்தின் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அந்த பிரச்னைகளை சரி செய்வதற்காக, அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடப்பதையே வாடிக்கையாக வைத்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

நான், 1997ல் ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். அப்போது, இந்த கிராமம் எங்கிருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது. முகவரி கேட்டு செல்லும் போது, மற்றவர்களுக்கு கூட தெரியவில்லை. அப்போது, கஷ்டப்பட்டு கிராமத்தை கண்டுபிடித்து ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் மராத்தியும் பேசுவர். அவர்களுக்கு கன்னடத்தில் பாடம் கற்று கொடுப்பது சற்று சிரமமாக இருந்தது.

பாம்பு கடி இங்கிருந்து பணி ஓய்வு பெற்று சென்றால், இந்த பள்ளிக்கு புதிதாக ஆசிரியர் நியமிக்கப்படுவது கஷ்டம். வசதி இல்லாத கிராமத்தில் உள்ள பள்ளியில் பணிபுரிய யாரும் விரும்ப மாட்டார்கள். இந்த பள்ளிக்கு வரும் வழியில், கரடி, காட்டுப்பன்றிகள் வருகை தரும். இதனால், பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் துாங்கி கொண்டிருக்கும் போது, என்னை பாம்பு கடித்தது. அப்போது என்னை, கிராம மக்களே மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றினர். இதற்கு நன்றி கடனாக கிராமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, அரசு அலுவலகங்களுக்கு நானும் அவர்களுடன் சென்று மனு அளித்து உள்ளேன்.

எனது குடும்பத்தினர் பெலகாவி வடகாவியில் வசிக்கின்றனர். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எனது இரண்டு பிள்ளைகளும் முதுகலை பட்டம் வரை படித்து உள்ளனர். அவர்களை பார்ப்பதற்கு வாரம் ஒரு முறை வீட்டிற்கு செல்வேன்.

இந்த கிராமத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பே மின்சாரம் வந்தது. தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் கூட மொபைல், இன்டர்நெட் வசதிகள் சரியாக கிடைக்காத கிராமமாக இருக்கிறது. இங்கு பெண் பிள்ளைகள் பள்ளிக்கு வருவது மிக குறைவு. எனவே, அவர்களின் வீடுகளுக்கு சென்று பள்ளிக்கு அழைத்து வருவேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement