மல்லிகைப் பூச்சரத்தால் வந்த வினை; பிரபல மலையாள நடிகைக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்

2

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு மல்லிகைப் பூச்சரம் எடுத்துச் சென்ற பிரபல மலையாள நடிகை நவ்யா நாயருக்கு அந்நாட்டு அதிகாரிகள் ரூ.1.14 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.


பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர், விக்டோரியா மலையாளிகள் சங்கத்தினர் ஏற்பாடு செய்த ஓணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, தனது கைப்பையில் 15 செ.மீ., நீள மல்லிகைப் பூச்சரத்தை வைத்திருந்ததற்காக, நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதத்தை மெல்போர்ன் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விதித்துள்ளனர்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நவ்யா நாயர் கூறியதாவது; நான் ஆஸ்திரேலியா புறப்படும் போது, என்னுடைய தந்தை எனக்கு மல்லிகைப் பூச்சரத்தை வாங்கிக் கொடுத்தார். அதை இரண்டாகப் பிரித்து, கொச்சி - சிங்கப்பூர் பயணத்தின் போது ஒன்றை தலையில் வைத்துக் கொண்டேன். மற்றொன்றை என்னுடைய கைப்பையில் வைத்திருந்தேன். மெல்போர்னில் அதை வைத்திருந்ததற்காக ரூ.1.14 லட்சத்தை அபராதமாக அதிகாரிகள் எனக்கு விதித்தனர்.

சட்டத்திற்கு எதிராக நான் தவறு செய்து விட்டேன். இதனை நான் வேண்டுமென்றே செய்யவில்லை. தவறு தவறு தான். 28 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தக் கூறியுள்ளனர், என தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து பரவும் நோய்களை தடுப்பதற்காக, ஆஸ்திரேலியாவில் மிகவும் கடினமான பல்லுயிர் பாதுகாப்பு விதிகள் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement